பக்கம் 3
ஸஹாபா விளக்கமும், அதன் அவசியமும்
ஸஹாபாக்களின் காலத்தில் அவர்கள் கற்றவர்களாகவும் அதனைப் புரிந்த மார்க்க மேதைகளாகவும் திகழ்ந்தார்கள். மேலும் அவர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் இருக்கவில்லை. மேலும் அவர்கள் அவர்களது தேவைக்கேற்ப அல்-குர்ஆனுக்கும் அல்-ஹதீஸிற்கும் விளக்கம் கொடுக்கவில்லை. நபித்தோழர்களிடத்தில் ஒரு ஆயத்திற்கு பலவிதமான விளக்கங்கள் இருக்கவில்லை. இதற்குக் காரணம் அவர்கள் அதன் வரையறைகளை அறிந்தவர்களாகவும், நன்கு புரிந்தவர்களாகவும் இருந்தார்கள். இதனால்தான் ஸஹாபாக்களின் காலத்தில் பிதுஅத் (மார்க்கத்தில் புதிதாக தோன்றிய விஷயம்) என்ற பேச்சிற்கே இடமிருக்கவில்லை.
அவர்கள் மத்தியில் பிரிவுகள் உருவாகவில்லை. அவர்களது கொள்கையும் மாறுபட்டதாக இருக்கவில்லை. இதனால் அந்த உம்மத்தின் மத்தியில் பிரிவுத்தன்மை தலைதூக்கவில்லை .
எப்பொழுது இஸ்லாமிய உம்மத் ஸஹாபாக்களின் வழிமுறையை ஓரம் கட்டினார்களோ அன்றிலிருந்து ஒவ்வொருவரும் அல்-குர்ஆன் விஷயத்தில் தான் தோன்றித்தனமான விளக்கங்களும், ஹதீஸ் விஷயத்தில் அவரவருக்கென்று புதுப்புது விளக்கங்களும் வர ஆரம்பித்து விட்டன.
மேலும் வழிகேடர்கள் அவர்களுடைய விளக்கத்திற்கு சார்பாக அவர்களுக்குத் தோன்றிய ஆயத்துக்களையும், ஹதீஸ்களையும் தொடர்புபடுத்தி கொள்வார்கள் . இவ்வாறு தம் விருப்பத்திற்கேற்ப ஒன்றையொன்று சம்பந்தப்படுத்தி அல்-குர்ஆன், அஸ்-ஸுன்னாஹ்வின் பெயரில் ஆதாரம் என்று வாதிடுகின்றார்கள். இதனால்தான் இன்று அழைப்புப்பணியில் பல பிரிவுகள், இயக்கங்கள், கூட்டங்கள், மத்ஹபுகள், என்று பல் சர்ச்சைகள் உருவாகிவிட்டது. நிச்சயமாக அல்-குர்ஆன் ஆயத்துக்களினாலும், ஹதீஸ்களினாலும் இவ்வாறு பிரிவுகள் உருவாகுமென்றிருந்தால் அது முதலில் ஸஹாபாக்கள் மத்தியில் தான் உருவாகியிருக்க வேண்டும். ஏனென்றால் அவர்களைவிட மார்க்கத்தை தெளிவாக விளங்கிய கூட்டம் யாருமே கிடையாது.
ஆயத்துக்களின் வரையரைகளையும் அதன் ஆழமான கருத்துக்களையும் விளங்கியவர்கள் அவர்களைவிடவும் வேறு யாருமில்லை . அவ்வாறு விளங்கிய அவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்ததன் காரணம் அவர்கள் அதற்கான வரையரைகளை சரிவரப் புரிந்து பேணிவந்தமையே ஆகும். அதனுடைய விளக்கங்களை சரியாக விளங்கிய காரணத்தினால் அவர்களுடைய கொள்கை ஒன்றாக இருந்தது. அவர்களுடைய வணக்கவழிபாடுகள் ஒன்றாக இருந்தது . அனைத்து அம்சங்களும் ஒன்றாகவே இருந்தது . அனைத்து விஷயங்களும் ஒரு அடிப்படையோடு இருந்த காரணத்தினால் அந்த மக்கள் வேறுபடவில்லை.
ஆம்! நாம் நபித்தோழர்களை நேசிக்க வேண்டும். அவர்களின் பெயர்களை சொல்லும்போது, கேட்கும்போது, எழுதும்போது ‘ரழியல்லாஹு அன்ஹு’ என்று கூறுவது சிறப்பாகும்.
அவர்களின் நேர்மையை நம்ப வேண்டும். இஸ்லாத்தில் அவர்கள் முந்தியவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களது சிறப்புக்களைப் பரப்ப வேண்டும். மனிதர்கள் என்ற வகையில் அவர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட பிணக்குகள் பற்றி பேசாதிருத்தல் வேண்டும். அவர்களை வெறுப்பவர்கள், கோபிப்பவர்கள், நிந்திப்பவர்கள், குறைசொல்பவர்கள், கேலி செய்பவர்கள் , விமர்சிப்பவர்கள், இழித்துப் பேசுபவர்கள், ஏசுபவர்கள், திட்டுபவர்கள், சபிப்பவர்கள், மட்டு மரியாதையற்ற முறையில் அவர்களைக் கையாளுபவர்கள் போன்றோரை விட்டு விலகி இருத்தல் வேண்டும். இவை அனைத்தும் அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமா அத்தினரின் நம்பிக்கைக் ஆகும்.