பக்கம் 4
ஸஹாபா விளக்கமும், அதன் அவசியமும்
சிறப்புமிக்க நபித்தோழர்களை கண்ணியப்படுத்துவது, நேசிப்பது என்பது சர்வ சாதாரணமான விஷயம் அல்ல. உண்மையில் அது முழுக்க முழுக்க அகீதாவுடன் பின்னிப்பிணைந்ததஆகும். மேலும் இதில் ஏற்படுகின்ற கொஞ்ச நஞ்ச அசைவும், ஆட்டமும், தளர்வும் கூட மிகப் பாரதூரமானதாகும். ஏனெனில் ஸஹாபாக்கள் மூலம் தான் அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் சுத்தமான முறையில் அப்படியே அல்லாஹ் பாதுகாத்து பின் வருபவர்களின் கைகளில் தவழச் செய்தான். அவர்களின் நேர்மையில், மகிமையில் இழுக்கு ஏற்படுமென்றால் அது இஸ்லாம் என்ற கட்டிடத்துக்கே சந்தேகமின்றி ஆபத்தை ஏற்படுத்தும்.
கண்ணியமிக்க நபித்தோழர்களை ஏதோ நம்மைப் போன்று சாமானியர்களாக எண்ணுவது, நோக்குவது, கையாளுவது வளர்ந்து, முற்றி அவர்களை தரக்குறைவாக பேசவும், எழுதவும், வாய்க்கு வந்தவாறெல்லாம் கடுமையாக விமர்சிக்கவும் இன்று சமூகத்தில் தவ்ஹீது ஜமாஅத் என்ற கூட்டத்தினர் உருவெடுத்துள்ளனர் . இப்போக்கு நம்பிக்கையின் அடிப்படையையே ஆட்டம் காணச் செய்யும். ஸஹாபாக்களை வெறுப்பவர்கள் காஃபிர்கள் என இமாம் மாலிக் (ரஹிமஹுல்லாஹ்) உறுதியாகத் தீர்ப்பு வழங்கியுள்ளார்கள்.
பின்வரும் ஹதீஸ் கவனத்துக்குரியது:
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்,
لاَ تَسُبُّوا أَصْحَابِي، فَلَوْ أَنَّ أَحَدَكُمْ أَنْفَقَ مِثْلَ أُحُدٍ ذَهَبًا مَا بَلَغَ مُدَّ أَحَدِهِمْ وَلاَ نَصِيفَهُ
என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுத் மலையளவு தங்கத்தைச் செலவு செய்தாலும் (என் தோழர்களான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரு கைக்குவியல், அல்லது அதில் பாதியளவைக்கூட (அவரது) அந்தத் தர்மம் எட்ட முடியாது. (ஸஹீஹ் அல்-புகாரி : 3673)
மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்,
الأَنْصَارُ لاَ يُحِبُّهُمْ إِلاَّ مُؤْمِنٌ، وَلاَ يُبْغِضُهُمْ إِلاَّ مُنَافِقٌ، فَمَنْ أَحَبَّهُمْ أَحَبَّهُ اللَّهُ، وَمَنْ أَبْغَضَهُمْ أَبْغَضَهُ اللَّهُ
இறைநம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் அன்சாரிகளை நேசிக்க மாட்டார்கள்; அவர்களை நயவஞ்சகர்களைத் தவிர வேறெவரும் வெறுக்கவும் மாட்டார்கள். யார் அவர்களை நேசிக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் நேசிக்கிறான். யார் அவர்களை வெறுக் கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் வெறுக்கிறான். (ஸஹீஹ் அல்-புகாரி 3783)
தம்மையும், தம்மிடமிருந்தவற்றையும் அப்படியே இஸ்லாத்துக்காக அர்ப்பணிப்பு செய்தவர்கள், நபித் தோழர்கள். யதார்த்தத்தில் தீனுல் இஸ்லாத்தின் பாதுகாப்பு அரண்கள், இஸ்லாத்தின் தூண்கள், அவர்களின் உதிரம் அதன் நீர். அவர்களின் தியாகம் அதன் உரம். மனமார ஏற்போம்! மதிப்போம்! போற்றுவோம்! கண்ணியப்படுத்துவோம்!
அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாஹ்வையும் சரியான முறையில் விளங்கிக் கொள்ள ஸஹாபாக்களின் விளக்கத்தில் விளங்க முயற்சிபோம் . ஸஹாபாக்களின் சிறப்புகள், அவர்கள் பின்பற்ற வேண்டும் என்பதை பறைசாற்றுகின்ற அல்-குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள், அறிஞர் பெருமக்களின் கூற்றுக்களை அடிக்கடி நமக்கு மத்தியில் பரப்ப வேண்டும். இவ்வழியில் நம் உள்ளங்களில் அவர்களின் மீது அன்பும் நேசம் நிரம்பி வழியும். அருமை சஹாபாக்கள் மீதான அன்பை, மரியாதையை, அவர்களின் கண்ணியத்தை, அந்தஸ்தை நமது உள்ளங்களிலே ஊட்டி வளர்க்க வேண்டும்.
எனவே, அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாஹ்வையும் ஸஹாபாக்கள் விளங்கிய அந்த சரியான முறையில் புரிந்து கொள்வதன் மூலமே இஸ்லாத்தைப் பரிபூரணமாக அதன் தூய்மையான வடிவில் புரிந்து பின்பற்ற முடியும். எனவே, அதற்கான சரியான வழிமுறைகளைப் பின்பற்றி அவற்றை சரியான முறையில் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
அல்லாஹ் மிக அறிந்தவனாக இருக்கின்றான்.