Skip to content
Part 2 of 4

பக்கம் 2

ஸஹாபா விளக்கமும், அதன் அவசியமும்

النُّجُومُ أَمَنَةٌ لِلسَّمَاءِ فَإِذَا ذَهَبَتِ النُّجُومُ أَتَى السَّمَاءَ مَا تُوعَدُ وَأَنَا أَمَنَةٌ لأَصْحَابِى فَإِذَا ذَهَبْتُ أَتَى أَصْحَابِى مَا يُوعَدُونَ وَأَصْحَابِى أَمَنَةٌ لأُمَّتِى فَإِذَا ذَهَبَ أَصْحَابِى أَتَى أُمَّتِى مَا يُوعَدُونَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)  அவர்கள் கூறினார்கள்,

நட்சத்திரங்கள் வானத்திற்குப் பாதுகாப்பாகும். அவை சென்று விட்டால் வானத்திற்கு வாக்களிக்கப்பட்ட (அழிவு) வந்துவிடும். நான் எனது தோழர்களுக்கு பாதுகாப்பாவேன். நான் சென்று விட்டால் எனது தோழர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (குழப்பங்கள்) வந்துவிடும். எனது தோழர்கள் எனது சமுதாயத்திற்குப் பாதுகாப்பாவார்கள். அவர்கள் சென்றுவிட்டால் எனது சமுதாயத்தினருக்கு வாக்களிக்கப்பட்டவை வந்துவிடும்.(முஸ்லிம் )

நபித் தோழர்கள்,  நபி  (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)  அவர்களுடன் ஒன்றாக வாழ்ந்தவர்கள். நபியவர்களுக்கு வஹீ அருளப்பட்டதை நேரடியாகப் பார்த்தவர்கள். அல்லாஹ்வும், அவனது தூதரும் அல்-குர்ஆன் அஸ்-ஸுன்னாஹ் மூலம் எதனை நாடுகிறார்கள் என்பதை நன்கறிந்தவர்கள். அவற்றை விளங்குவதில் சிக்கல்கள் வரும்போது அவற்றுக்கான விளக்கத்தை நேரடியாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)  அவர்களிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டவர்கள்.

நபி  (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)  அவர்கள் அல்-குர்ஆனையும், அஸ்-ஸுன்னாவையும் நபித்தோழர்களுக்கு கற்றுக் கொடுத்து மேலும் அதன்  விளக்கத்தையும் அவர்களுக்கு தெளிவுபடுத்தினார்கள். நபித்தோழர்கள் அல்-குர்ஆனையும், அஸ்-ஸுன்னாவையும்  மேலும் அது கூறவருகின்ற  விளக்கத்தையும் முழுமையாக நபி  (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)  அவர்களிடம் இருந்து கல்வியாக பெற்றுக்கொண்டார்கள்  . எனவே அல்-குர்ஆன்,அஸ்-ஸுன்னாஹ்வை மிகச் சரியாக விளங்க வேண்டுமென்றால் நபித்தோழர்கள் விளங்கிய அடிப்படையில் விளங்க வேண்டும். 

அல்-குர்ஆன் அஸ்-ஸுன்னாஹ் வார்த்தைகள் மூலம் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எதை நாடுகிறார்கள் என்பதை அறிந்து கொள்வதற்கு, அல் குர்ஆன் அருளப்பட்ட அரபு மொழியை அறிந்து கொள்வதுடன் ஸஹாபாக்களும், தாபியீன்களும், அஹ்லுஸ் ஸுன்னாஹ் உலமாக்களும் குறிப்பிட்ட சொற்களுக்கு என்ன அர்த்தங்களைக் கூறியுள்ளார்கள் என்பதையும் அறிதல் வேண்டும்.

அல்-குர்ஆனையும்,அஸ்-ஸுன்னாஹ்வையும் சரியான முறையில் விளங்கிக் கொள்ள ஸஹாபாக்களின் விளக்கத்தின் நிழலில் நின்று விளங்க முயற்சிக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது. குறிப்பாக இது மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். ஏனெனில் அல்-குர்ஆன் அஸ்-ஸுன்னாஹ்வை விளங்கும்போது ஸஹாபாக்களின் விளக்கத்தை ஒதுக்கி விட்டு தமது சுய சிந்தனையின் அடிப்படையில் விளங்க முற்பட்டதால் தான்  இஸ்லாமிய வரலாற்றில் பல வழிகேடுகளும், பல வழிகேடானா கூட்டங்களும் தோன்றின என்பது வரலாறு சொல்லும் உண்மையாகும்.

எந்த அல்-குர்ஆன் வசனங்கள் எந்த அல்-குர்ஆன் வசனத்துடன் தொடர்பானது. ஒரு ஹதீஸ் எந்த அல்-குர்ஆன் வசனங்கள் தொடர்புடையுது. எந்த அல்-குர்ஆன் வசனங்கள் அந்த ஹதீஸுடன் தொடர்பற்றது . அதேபோன்று  எந்த ஹதீஸ்கள் எந்த ஹதீஸுடன் தொடர்புடையது. இன்னும் எந்த ஹதீஸ்கள் எந்த ஹதீஸுடன் தொடர்பற்றது .இவையனைத்தையும்  நபி  (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அருமை ஸஹாபாக்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள். 

அல்-குர்ஆன் வசனங்களின் வரையரைகள் என்னவென்றும், ஒரு ஆயத்தினை இன்னுமொரு ஆயத்துடன் எவ்வாறு சேர்த்து, பிரித்து விளங்குவதென்றும் மேலும் ஒரு ஹதீஸுடன் எந்த ஆயத்தினை அல்லது எந்த ஹதீஸினை சேர்த்து  விளங்குவது என்பதையும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஸஹாபாக்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்கள். மேலும்  ஹதீஸ்களை ஹதீஸ்களுடனும் ஆயத்துக்களுடனும் தொடர்புபடுத்தி தேவையான விளக்கங்களை கற்றுக்கொடுத்தார்கள் .