பக்கம் 1
ஸஹாபா விளக்கமும், அதன் அவசியமும்
ஸஹாபா விளக்கமும், அதன் அவசியமும்
ஷெய்க் யஹ்யா ஸில்மி அஸ் ஸைலானி ஹபிழஹுல்லாஹ்
بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم
الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد
இஸ்லாமிய மார்க்கத்தை முழுமைப்படுத்திட அல்லாஹ் سبحانه وتعالى இறுதித் தூதராக முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை அனுப்பி அவர்கள் மீது அவனின் கடைசி வேதமாகிய அல்-குர்ஆனை இறக்கி வைத்தான்.
முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ரஸுலாகப் அனுப்பட்ட முதல் அவர்களின் மரணம் வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் யாரெல்லாம் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை முஸ்லிம்களாக சந்தித்து, மரணிக்கும் வரை முஸ்லிம்களாக மரணித்தார்களோ அவர்கள் ஒவ்வொருவரும் ‘சஹாபி’ என அழைக்கப்படுவர்.
இதனை தான் இமாம் அல்-ஹாஃபிழ் இப்னு ஹஜர் (رحمه الله) அவர்கள் அல்-இஸாப ஃபீ தம்யீசுஸ் ஸஹாபா என்ற நூலில் 1/158 - ல் ஸஹாபி என்பதன் வரைவிலக்கணத்தை எடுத்துக் காட்டியுள்ளார்கள்.
قال الحافظ ابن حجر رحمه الله الصحابيّ: من لقي النبيّ صلّى اللَّه عليه وسلم مؤمنا به ، ومات على الإسلام
யார் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை ஈமான் கொண்ட நிலையில் சந்தித்து, இஸ்லாமிய மார்க்கத்திலே இருந்த நிலையில் மரணித்தாரோ அவர் தான் ஸஹாபி (நபித்தோழர்) எனப்படுவார்.
‘சஹாபி’ என்ற சொல் அரபு மொழி வழக்கில் 'தோழர்' எனும் அர்த்தத்தை அளித்தாலும், இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் மேலே கூறப்பட்ட அர்த்தத்தில் தான் இஸ்லாமிய அறிஞர்கள் இடையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அருமை நபி முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மக்காவில் தனியாக அல்லாஹ்வின் மார்க்கத்தை மக்களுக்கு முன் வைத்தார்கள். அப்போது அவர்களுடன் கைகோர்த்து இஸ்லாத்தை பரப்புவதில் தியாக சிந்தனையுடன் இருந்த மக்கா முஸ்லிம்களும் (முஹாஜிரீன்களும்), பின்னர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மதீனாவுக்கு இடம் பெயர்ந்து மார்க்கப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது அங்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த மதீனா முஸ்லிம்களும் (அன்ஸாரிகளும்) பொதுவில் சஹாபா (நபித்தோழர்கள்) ஆவர்.
நபித்தோழர்களை பற்றி எந்த சந்தேகத்துக்கு இடம் வைக்காமல், அல்லாஹ் سبحانه وتعالى அவர்களை மிகச் சிறப்பான அளவுகோல் கொண்டு சிறப்பித்து விட்டான். நபித்தோழர் என்பவர்கள் யார்? அவர்களின் சிறப்பு, மகிமை, அந்தஸ்து என்ன? என்பதை அல்-குர்ஆனும் அஸ்-ஸுன்னாவும் நமக்கு தெள்ள தெளிவாக எடுத்துரைத்துவிட்டன.
وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُم بِإِحْسَانٍ رَّضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ
முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும் (இஸ்லாத்தை ஏற்க) முதலாவதாக முந்திக் கொண்டவர்களும் (அவர்களின் சொல், செயல்களை) நன்முறையில் அவர்களைப் பின்பற்றினார்களே அவர்களும்-அவர்களை அல்லாஹ் திருப்தியடைந்தான். அவர்களும் (அல்லாஹ்வாகிய) அவனை திருப்தியடைந்தனர், அன்றியும், சுவனபதிகளை அவர்களுக்கென அவன் தயாராக்கி வைத்திருக்கின்றான், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள், அவற்றிலேயே நிரந்தரமாக(த் தங்கி) இருப்பவர்கள், இது மகத்தான வெற்றியாகும். ( அல்குர்ஆன் -09:100)