பக்கம் 7
அல்-குர்ஆனின் தமிழாக்கங்களும் தமிழ் விளக்கவுரைகளின் உண்மை நிலைப்பாடும்
6. அஷ்அரி : அபுல் ஹஸன் அல்-அஷ்அரி (270-330 ஹி) என்பவரால் உருவாக்கப்பட்ட அஷாயிரா மத்ஹபை பின்பற்றுபவர்கள் தான் அஷ்அரி என்று அழைக்கப்படுவார்கள். அல்லாஹ்வின் பெயர் பண்புகளில் ஏழு பண்புகளை மட்டும் ஏற்றுக்கொண்டு மற்றவைகளை தங்களின் சுயபுத்தியின் அடிப்படையில் மறுத்துவிடுவார்கள். இந்த கொள்கையை உருவாக்கிய இமாம் அபுல் ஹஸன் அல்-அஷ்அரி தன் தவறை உணர்ந்து அஹ்லுஸ் ஸுன்னாஹ்வின் கொள்கைக்கு மாறிவிட்டார்கள் ஆனால் அவரை வழிகேட்டில் பின்பற்றியவர்கள் இன்னும் மாறவில்லை.
7. மாத்துருதீ : இவர்கள் இல்முல் கலாமை சேர்ந்த ஒரு கூட்டத்தினர். இன்று உஸ்பகிஸ்தான் என்று அழைக்கப்படும் நாட்டில் பிறந்த அபு மன்சூர் அல்-மாத்துருதீ (இ 333ஹி) என்பவரால் உருவாக்கப்பட்டதாகும். இவர்களுடைய கொள்கை அஷாயிராக்களின் கொள்கையையும் ஒரு சில இடங்களில் முஃதஸிலா மற்றும் ஜஹ்மிய்யாவின் கொள்கைகளையும் கொண்டதாகும். ஈமானில் செயல்கள் அடங்காது என்று நம்பிக்கை கொண்டவர்களில் இவர்களும் ஒரு கூட்டம் ஆவர். இன்றைய தியோபந்துகள் கொள்கையில் தங்களை மாத்துருதீக்கள் என்று கூறிக்கொள்கிறார்கள்.
8. ஸூஃபீ : இஸ்லாமிய மார்க்கத்தின் முதல் தலைமுறையினரால் ஸூஃபிய்யா அறியப்படவில்லை மாறாக மற்ற சமூகங்களிலிருந்து தழுவியதாகும். இவர்கள் முதலில் ஈராக்கின் பஸ்ராவில் தான் அறியப்பட்டார்கள். இமாம் ஹஸன் அல் பஸரியின் தோழரான அப்துல் வாஹித் இப்னு சைது என்பவர் தான் முதன் முதலில் பேணுதல், வணக்கம், அல்லாஹ்விற்கு பயப்படுத்தல் போன்றவற்றில் தீவிரப்போக்கை கையாண்டு ஸூஃபிய்யாவை வெளிப்ப்டுத்தினார். ஸூஃபிகள் மறைவான ஞானம் அறிந்தவர்கள் என்று தங்களை கூறிக்கொள்வது மட்டுமல்லாமல் அவர்களுடைய ஷெய்குகளை கண்மூடித்தனமாக பின்பற்றுதல், அல்லாஹ் அனைத்திலும் உள்ளான் என்று கூறுதல் போன்ற தீவிர வழிகேடுகள் உள்ளது. நக்சபந்தி, பரேள்வி போன்ற கூட்டத்தினர் இந்த கொள்கையை உடையவர்களே.
9. காதியானி : இந்தியாவில் பிறந்து தன்னை நபி என்று பிரகடணப்படுத்திக் கொண்ட மிர்ஸா குலாம் அஹமது அல்-காதியான் (13வது நூற்றாண்டு) என்பவரை பின்பற்றுபவர்கள் காதியானி என்று அழைக்கப்படுவர். தனக்கு வஹி வந்தது என்றும் தன்னை நம்பிக்கை கொள்ளாதவர்கள் காஃபிர்கள் என்றும் கூறினார். இவருக்கு பல நாடுகளில் பின்பற்றுபவர்கள் இருந்தனர். சிரியா நாட்டில் சிலர் இருந்தனர் அல்லாஹ் அவர்களை அழித்துவிட்டான்.
10. முஃதஸிலா : கிரேக்க தத்துவவியலை அடிப்படையாகக் கொண்டு வாஸில் இப்னு அதா (இ 131ஹி) என்பவரால் உருவாக்கப்பட்டது தான் இக்கொள்கை ஆகும். இவர் இமாம் ஹஸன் அல்-பஸரி அவர்களின் வகுப்புகளிலிருந்து தன்னை தனிமைபடுத்திக் கொண்டார். அல்லாஹ்வின் பண்புகளை மறுப்பது, அல்-குர்ஆன் படைப்பு என்பது, பாவம் செய்பவர்கள் காஃபிர்களும் இல்லை முஸ்லிம்களும் இல்லை அவ்விரண்டிற்கும் இடையில் என்று கூறுவது போன்ற வழிகேடுகளை உடையவர்கள் ஆவர்.
11. முஹம்மது இப்னு உமர் அல்-வாகிஃபீ (130-207 ஹி) : இவர் ஒரு வரலாற்று ஆசிரியர் ஆவார். ஹதீஸ் கலை அறிஞர்களால் பெரிதும் விமர்சனம் செய்யப்பட்ட கிதாப் அல்-மகாசி என்ற நூலின் ஆசிரியரும் ஆவார். இவ்விமர்சனங்கள் இமாம் அல்-மிஸ்ஸி, இமாம் இப்னு ஹஜர் மற்றும் அத்-தஹபி அவர்களுடைய நூற்களிலும் காணலாம்.