பக்கம் -1.
எகிப்து நாட்டின் ஜாமியதுல் அஸ்ஹர் உருவாகிய வரலாறும் மீலாத் நபி விழாவின் ஆரம்பமும் -
எகிப்து நாட்டின் ஜாமியதுல் அஸ்ஹர் உருவாகிய வரலாறும் மீலாத் நபி விழாவின் ஆரம்பமும்
ஷெய்க் யஹ்யா சில்மி அஸ்ஸைலானி ஹபிழஹுல்லாஹ்
بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم
الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد
ஜாமியதுல் அஸ்ஹர் ஆரம்பத்தில் ஜாமியது பாதிமதுஸ் ஸஹ்ரா என்ற பெயரில்தான் ஆரம்பிக்கப்பட்டது. அதனை ஆரம்பித்தவர்கள் அப்பாஸியாக்களின் காலத்தைச் சேர்ந்த யஹுதிகளின் ஒரு கூட்டமாகும். இக்கூட்டத்தினர் தங்களை பாத்திமா றழியல்லாஹு அன்ஹாவின் பரம்பரையென அறிமுகப்படுத்தியது மட்டுமின்றி, மீலாதுந் நபி விழா என்ற பித்அத்தினையும் இவர்கள் ஆரம்பித்தார்கள்.
அதற்குக் காரணம் கூறும் போது, ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறந்த தினம் கொண்டாடப்படும் போது றஸுலுல்லாஹ்வின் பிறந்த தினத்தை ஏன் கொண்டாடக் கூடாது என்ற வாதத்தை வைத்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வபாத்தாகிய றபியுல் அவ்வல் பிறை 12 என்ற தினத்தை அன்னாரின் பிறந்த தினமென்று கூறி மீலாதுந் நபி விழாவை முஸ்லிம்களுக்கு கொண்டாடும் தினமாக அறிமுகப்படுத்தி விட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் அவர்கள் எத்தினத்தில் பிறந்தார்கள் என்பதற்கான எவ்வித ஆதாரமும் பதியப்பட்டிருக்கவில்லை. ஹிஜ்ரி ஆண்டு என்பதும் றஸுலுல்லாஹ்வின் ஹிஜ்ரத் செய்த ஆண்டை வைத்தே கணிக்கப்படுகிறது. நபியுடைய ஹிஜ்ரத் அன்னாரின் 53 ஆவது வயதில்தான் நடந்தது. அதற்கு முன்னால் பிறையின் அடிப்படையில் மாதங்கள் கணிக்கப்பட்டு வந்தாலும் பின்னோக்கிச் சென்று எப்போது நபி பிறந்திருப்பார் என்பதைக் கண்டறிவது எவ்வகையிலும் சாத்தியமற்றதாகும்.
எனவே, நபியுடைய பிறந்த தினத்தை அன்று யாரும் அறிந்திருக்கவில்லை. ஆனால், அந்த நபி மரணித்த போது மரணித்தவர் யார் என்பதை உலகம் நன்கு அறிந்திருந்திருந்தது.
நபியுடைய மரணம் நிகழ்ந்த திகதி றபியுல் அவ்வல் பிறை 12 என்பது உலகம் அறிந்த உண்மை. இந்த விஷயம் தொடர்பாக இமாம் இப்னு கஸீர் றஹிமஹுல்லாஹ் தனது அல் பிதாயா வந்நிஹாயா என்ற நூலில் பதிவு செய்துள்ளார். இன்னும் ஏனைய வரலாற்று உலமாக்கள் றபியுல் அவ்வல் 12 நபி மரணித்த தினம் என்பதை உறுதிப்படுத்துகிறார்கள்.