பக்கம் 3
அல் இஸ்திகாமா - மார்க்கத்தில் உறுதியுடன் நிலைத்திருத்தல்
எனவேதான் அந்த ஸஹாபாக்களைப் பாராட்டி அல்லாஹு தஆலா பின்வருமாறு கூறுகிறான்,
كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ وَلَوْ آمَنَ أَهْلُ الْكِتَابِ لَكَانَ خَيْرًا لَّهُم مِّنْهُمُ الْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمُ الْفَاسِقُونَ
(விசுவாசம் கொண்டோரே) மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தவர்களிளெல்லாம்) மிக மேன்மையான சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். (ஏனெனில்) நன்மையான காரியங்களை நீங்கள் ஏவுகிறீர்கள். தீமையை விட்டும் (அவர்களை) நீங்கள் விலக்குகிறீர்கள். மேலும் நீங்கள் அல்லாஹ்வை விசுவாசிக்கிறீர்கள். (ஆல இம்ரான் : 110)
மேற்கூறிய வசனத்தில் அல்லாஹு தஆலா ஸஹாபாக்களிடம் இருப்பதாகக் குறிப்பிட்டுக் காட்டுகின்ற பண்புகள் எமது வாழ்விலும் வர வேண்டுமெனில் நாம் நமது வாழ்வை ஈமானோடு பிண்ணிப் பிணைந்ததாக அமைத்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் நாம் நம்பிக்கை கொண்டதையும், நாம் சொல்வதையும் எமது வாழ்வில் நிலை நாட்டுபவர்களாக இருக்க வேண்டும்.
இதற்கு மாற்றமாக இயக்கவாதிகளைப் போன்று நடந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் அவர்களைப் பொருத்தவரை அவர்களின் வாழ்வில் மார்க்கத்தை நிலை நாட்டுவதை அவசியமாகக் கருதுவதில்லை. குறிப்பிட்ட சில விடயங்களைச் செய்வதாலும், அமல்களின் சிறப்புகளைப் பற்றி அவர்களின் சபைகளில் பேசுவதாலும் அவர்கள் மார்க்கத்தைப் பூரணமாக நிலைநாட்டிவிட்டதாகக் கருதுகின்றனர். அவர்கள் வரைந்துள்ள எல்லைக்கு வெளியே எந்த மார்க்க விடயங்களையும் கவனிக்க மாட்டார்கள். அதனை நிலைநாட்டுவதற்குப் பின்வாங்குவதோடு அதற்கென காரணங்களைக் கூறி நழுவியும் விடுகின்றனர். இதனையே அனைத்து இயக்கவாதிகளும், பிரிவினர்களும் தங்களின் வழிமுறையாக அமைத்துக் கொண்டனர்.
அஹ்லுஸ்ஸுன்னாவைச் சேர்ந்தவர்களை அல் குர்ஆன், ஸுன்னாவை நிலைநாட்டுவதை விட்டும் திசை திருப்ப முடியாது. அவர்கள் ஆதாரங்களை உறுதியாக அறிந்து கொண்டால் அதில் உறுதியுடன் செயற்படுவார்கள். அங்கும் இங்கும் வீசுகின்ற மயக்கமான காற்றுக்கு அவர்கள் வளைந்து கொடுப்பவர்களல்ல. அஹ்லுஸ்ஸுன்னாவைப் பொருத்தவரை இவ்வுலகில் அவர்களைச் சுற்றி என்ன நிகழ்ந்த போதும் மார்க்கத்தை உறுதியோடு நிலைநாட்டுவதற்கே முன்னுரிமை அளிப்பார்கள். அதன் பின்புதான் மற்ற விடயங்களுக்கு இடம் கொடுப்பார்கள். அனைத்துக் காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே உள்ளது என்பதை அவர்கள் உறுதியாக நம்புவார்கள். எனவே செயற்படுவதில் அவர்கள் பின்வாங்குவதில்லை.
இதனை அல்லாஹு தஆலா அவனது வேதத்தில் கூறுகிறான்,
الَّذِينَ إِن مَّكَّنَّاهُمْ فِي الْأَرْضِ أَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنكَرِ وَلِلَّهِ عَاقِبَةُ الْأُمُورِ
அவர்கள் எத்தகையோரென்றால், நாம் அவர்களுக்கு பூமியில் (காரியங்களை நிர்வகிக்கும்) ஆற்றலை ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்கள் தொழுகையை முறையாக நிறைவேற்றுவார்கள். ஸகாத்தையும் கொடுத்து வருவார்கள். நன்மையை ஏவி தீமையை விட்டும் விலக்குவார்கள். மேலும் சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது. (ஹஜ் : 41 )