பக்கம் 2
அல் இஸ்திகாமா - மார்க்கத்தில் உறுதியுடன் நிலைத்திருத்தல்
ஈமானின் வரைவிலக்கணத்தை அதன் சரியான வழிமுறையில் விளங்காததன் காரணமாகவே முர்ஜிஆ என்ற கூட்டம் வழிகெட்டுப் போனது. முர்ஜிஆவின் கொள்கையின் படி, “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற கலிமாவை நாவால் மொழிந்து விட்டால் ஈமான் பரீபூரணமாகிவிடும்ங. அதனை வாழ்வில் செயற்படுத்தினாலும், இல்லாவிட்டாலும் அது ஈமான் கொண்டதில் குறைபாடாக அமையாது என்பதே முர்ஜிஆக்களின் கொள்கையாகும்.இதன் விளைவாக முர்ஜிஆக்களும், அக்கொள்கையின் தாக்கத்துக்குள்ளான பிரிவுகளும் தாங்கள் நம்பிக்கை கொண்டதை செயலில் கொண்டு வருவது அவசியமானதெனக் கருதவில்லை.
அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் மார்க்கத்தை நிலைநாட்டுவதில் கவனக் குறைவாக நடந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் எதனைத் தங்களின் மார்க்கமென்றும், அல்லாஹ்வின் சட்டமென்றும், நபியின் வழிமுறையென்றும் தெரிந்து கொண்டார்களோ அதனை அவர்கள் தங்களின் வாழ்வில் நிலை நாட்டுவார்கள். அவ்வாறு செய்வதை விட்டும், அவர்களைத் தடுப்பதற்கும் உலகில் எதுவும் காரணமாக இருக்காது. அவர்களுக்கு வருகின்ற சோதனைகள் அவர்களின் செயற்பாடுகளை நிறுத்திவிட முடியாது. அவர்கள் அல்லாஹ்வின் பின் வரும் வசனத்தை நினைவு கூர்வார்கள்.
الم أَحَسِبَ النَّاسُ أَن يُتْرَكُوا أَن يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ ۖ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ
أَمْ حَسِبَ الَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ أَن يَسْبِقُونَا ۚ سَاءَ مَا يَحْكُمُونَ
அலிப் லாம் மீம். மனிதர்கள் 'நாங்கள் விசுவாசம் கொண்டோம்' என்று அவர்கள் கூறுவது கொண்டு (மட்டும்) அவர்கள் விட்டுவிடப்படுவார்கள் என்றும், அவர்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள் என்றும் எண்ணிக் கொண்டார்களா?. இவர்களுக்கு முன்னிருந்தோரையும் திட்டமாக நாம் சோதித்திருக்கி்ன்றோம். ஆகவே (விசுவாசம் கொண்டோம் என்று கூறும் இவர்களில்) உண்மை சொல்பவர்களை, நிச்சயமாக அல்லாஹ் அறிவான். (அவ்வாறே இவர்களில்) பொய்யர்களையும் நிச்சயமாக அவன் அறிவான். அல்லது தீமையைச் செய்கின்றார்களே அவர்கள் நம்மை விட்டும் தப்பித்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டார்களா? (அவ்வாறாயின் இதைப் பற்றி) அவர்கள் தீர்மானம் செய்தது மிகக் கெட்டது. ( அன்கபூத் : 1— 4 )
நாம் உண்மையில் மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள் என்றால் இரட்சகன் நமக்குத் தந்துள்ள தெளிவை உறுதியோடு நிலை நாட்டுவதில் கவனமின்றி செயற்படக் கூடாது. ஏனெனில் நாம் செய்பவை அல்லாஹ்வுக்காக செய்யப்படுவதாகும். இப்பண்பில்தான் அஹ்லுஸ்ஸுன்னாவைச் சேர்ந்தவர்களும், அதனைச் சேராதவர்களும் வேறுபடுகின்றனர். எனவே நாம் மார்க்கத்தைத் தெளிவாக அறிந்த பின்பு, அதனை நாவால் சொல்வதோடும் உள்ளத்தால் நம்புவதோடும் நின்றுவிடாமல் அதனை நிலைநாட்டுபவர்களாகவும் இருக்க வேண்டும்.
அதன் மூலம்தான் தன்னிலும், சமூகத்திலும் மாற்றமும் முன்னேற்றமும் உருவாகும். அவ்வாறு அன்று ஸஹாபாக்கள் செயற்பட்டதனாலேயே அந்த சமூகத்தில் சீர்திருத்தமும், மாற்றமும், முன்னேற்றமும் ஏற்பட்டன.