Skip to content
Part 1 of 5

பக்கம் 1

அல் இஸ்திகாமா - மார்க்கத்தில் உறுதியுடன் நிலைத்திருத்தல்

அல் இஸ்திகாமா - மார்க்கத்தில் உறுதியுடன் நிலைத்திருத்தல்

ஷெய்க் யஹ்யா ஸில்மி அஸ் ஸைலானி ஹபிழஹுல்லாஹ்

بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم

الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد

அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தின் கொள்கையில் மிக முக்கியமானதொரு அம்சமே இஸ்திகாமத் என்பதாகும். இஸ்திகாமத் என்றால் மார்க்கத்தில் உறுதியாக நிலைத்திருத்தல் என்று பொருள்படும். 

இஸ்திகாமத்துடன் மார்க்கத்தைப் பின்பற்றுவதால் அல்லாஹ்விடமிருந்து வருகின்ற உதவியைப் பற்றி அல் குர்ஆனில் அல்லாஹு ஸூப்ஹானஹூவ தஆலா இவ்வாறு கூறுகிறான்,

إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ 

நிச்சயமாக எங்கள் இரட்சகன் அல்லாஹ்தான் என்று கூறி பின்னர் (அதன் மீது) உறுதியாக நிலைத்து இருந்தார்களே அத்தகையோர், அவர்கள் மீது மலக்குகள் (மரண வேளையில்) இறங்கி (செல்ல இருக்கும் மறுமையைப் பற்றி) நீங்கள் பயப்படாதீர்கள். (நீங்கள் இவ்வுலகில் விட்டுச் செல்லும் மனைவி, மக்கள், சொத்து சுகம் யாவற்றையும் பற்றி) கவலைப்படாதீர்கள். நீங்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தீர்களே அத்தகைய சுவனபதியைக் கொண்டு நன்மாராயம் பெறுங்கள் ( என்று கூறுவார்கள் ). (41:30-32)

இஸ்திகாமத் - உறுதியாக நிலைத்திருத்தல் என்பதில் அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தினருக்கும், மற்ற பிரிவினர்களுக்குமிடையில் வேறுபாடு காணப்படுகிறது. இதற்கான காரணம் என்னவென்றால், மார்க்கத்தை உறுதியாக எடுத்து நடப்பதில் அஹ்லுஸ்ஸுன்னாவைச் சேர்ந்தவர்களைப் போன்று மற்ற பிரிவுகள் உறுதித் தன்மையோடு நடந்து கொள்வதில்லை.

உதாரணமாக, ஈமானின் வரைவிலக்கணத்தைக் கூறலாம். அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தினர் ஈமானுக்குக் கூறும் வரை விலக்கணம் என்னவென்றால்,

قَوْلٌ بِاللِّسَانِ وَتَصْدِيْقٌ بِالْقَلْبِ وَعَمَلٌ بِالْجَوَارِحِ يَزِيْدُ بِالطَّاعَةِ وَيَنْقُصُ بِالْمَعْصِيَةِ

ஈமான் என்பது நாவால் மொழிந்து உள்ளத்தால் நம்பி உடலுறுப்புகளால் செயற்படுத்துவது ஆகும். மேலும் அல்லாஹ்வுக்கு வழிப்படுவதைக்கொண்டு ஈமான் அதிகரிக்கும். அவனுக்கு மாறுசெய்வதைக்கொண்டு ஈமான் குறையும்.

இவ்வரைவிலக்கணத்தின் அடிப்படையில், நாம் “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற  கலிமாவை நாவினால் மொழிவது மட்டுமே ஈமான் பரிபூரணமாகாது. மாறாக நாம் எதனைச் மொழிகின்றோமே அதன் நம்பிக்கை நம் உள்ளத்தில் உறுதியாகப் பதிந்திருக்கவும் வேண்டும். அத்தோடு அதனை நமது வாழ்வில் நடைமுறைப்படுத்தவும் வேண்டும். இதுவே நமது ஈமானாக இருக்க வேண்டும்.இவ்வாறு ஈமானின் வரை விலக்கணத்தைப் புரிந்து நாம் வாழும் போதுதான் பூமியில் அல்லாஹ்வின் மார்க்கம் நிலைநாட்டப்படுகிறது.