Skip to content
Part 5 of 5

பக்கம் 5

அல் இஸ்திகாமா - மார்க்கத்தில் உறுதியுடன் நிலைத்திருத்தல்

தாங்கள் உறுதியுடன் பின்பற்றுவதற்கு முன்வருகின்றபோது அதனை எதிர்த்து நிற்பவர்களை விட்டும் தங்களின் உள்ளங்களால் ஒதுக்கி விடுவார்கள். எதிர்க்கின்றவர்கள் பெற்றோராகவோ, பிள்ளைகளாகவோ இருப்பினும் சரியே. மார்க்கமும், அல்லாஹ்வின் திருப்தியுமே அவர்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் அளவுகோளாக அமையும். அல்லாஹ்வின் கட்டளைகளையும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதல்களையும் இஸ்திகாமத்துடன் நிலைநாட்டும் ஒரு அடியான் எதிலும் பின்வாங்கும் பண்பைக் கொண்டிருக்க மாட்டான். பின்வாங்குதலென்பது ஈமான் கொண்ட பின் அதனை வாழ்வில் செயற்படுத்துவது அவசியமில்லை எனக் கூறுவோரின் பண்பாகும். 

ஈமானுக்கு அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத் கொண்டுள்ள வரை விலக்கணத்தின் அடிப்படையில் ஒவ்வொருவரும் அவரவர் சக்திக்கேற்ப மார்க்கத்தை நிலைநாட்டுவது தங்களின் கடமையென்பதைப் புரிந்திருப்பது அவசியமாகும். நம்மில் ஒவ்வொருவரும் ஈமானிலும். கொள்கையிலும் எந்தளவுக்கு மற்றவருடன் சகோதரத்துவம் பேணுகின்றோமோ அந்தளவுக்கு மார்க்கத்தை நிலைநாட்டுவதிலும் ஒருவருக்கொருவர் உதவியாளராகவும் இருக்க வேண்டும்.நிலைநாட்டுவதற்குத் தடையாக உள்ளவற்றை அகற்றுவதில் ஒருவருக்கொருவர் தோல் கொடுக்க வேண்டும். 

இப்பண்புகளைத் தன்னில் கொண்ட ஒரேயொரு மனிதன் மட்டும் இந்த சமூகத்தில் வாழ்ந்தாலும் அந்தத் தனி மனிதனுக்குப் பின்னால் ஆரோக்கியமானதொரு கூட்டம் உருவாகும்.அக்கூட்டத்தினரால் சமூகத்தில் மாற்றங்கள் தோன்றும். அது சிறியதொரு கூட்டமாக இருப்பினும் சரியே.அக்கூட்டத்தினர் நிலைநாட்டுகின்ற மார்க்கம் பூமியில் உறுதியானதாக இருக்கும். மக்கள் மார்க்கத்தின் தூய வடிவமென்று திரும்பிப் பார்க்குமளவுக்கு அவர்களின் பின்பற்றுதல் அமைந்திருக்கும்.

அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத் எனும் அக்கூட்டத்தைச் சேர்ந்தவர்களை அவர்களின் எதிரிகள் கூட நம்பி வாழ்வார்கள். ஏனென்றால் அந்தக் கொள்கைவாதிகளிடம் மார்க்கத்தினை உறுதியோடு பின்பற்றுகின்ற இஸ்திகாமத் என்ற பண்பு அமைந்திருக்கிறது. 

அல்லாஹ்விடம் நாம் பிரார்த்திக்கிறோம்! அவன் எங்கள் ஈமானை உறுதிப்படுத்தி எமக்கு அவன் தெளிவாகத் தந்துள்ள மார்க்கத்தை நிலைநாட்டுவதற்கான சக்தியையும் தருவானாக.

அல்லாஹ் மிக அறிந்தவனாக இருக்கின்றான்.