பக்கம் 4
அல் இஸ்திகாமா - மார்க்கத்தில் உறுதியுடன் நிலைத்திருத்தல்
அல்லாஹ் கூறுவதனடிப்படையில் ஸஹாபாக்களின் அடிச்சுவட்டில் செயற்படுகின்ற அஹ்லுஸ்ஸுன்னாவைச் சேர்ந்தவர்கள் தாங்கள் தொழுகையை நிலைநாட்டுவதிலும், ஸகாத் கொடுப்பதிலும், நன்மையை ஏவுவதிலும், தீமையைத் தடுப்பதிலும், அதன் பின் தங்களின் வாழ்வில் முகம்கொடுக்கின்ற சிரமங்களிலும், அல்லது தங்களை நோக்கி வருகின்ற மதிப்பும் சிறப்புகளிலும் இவையனைத்தையும் அல்லாஹ்வின் பொறுப்பில் விட்டவர்களாக தங்களின் மார்க்கத்தைப் பின்பற்றுவார்கள். அவ்வாறு உறுதியாகப் பின்பற்றுவதில் ஒருபோதும் பின்வாங்கமாட்டார்கள்.
இவ்வாறுதான் அன்றும் ஸஹாபாக்கள் செயற்பட்டனர். அந்த ஸஹாபாக்கள் பூமியில் எப்பகுதிக்குச் சென்றாலும் தொழுகையை நிலைநாட்டுபவர்களாகவும், ஸகாத்தைக் கொடுப்பவர்களாகவும் இருந்தார்கள்.அதே போன்று அவர்கள் வாழும் சமூகத்திற்கு நன்மையை ஏவுபவர்களாகவும், தீமையைத் தடுப்பவர்களாகவும் இருந்தார்கள். அதன் பின் அந்த சமூகத்தின் புறத்திலிருந்து வருகின்ற சர்ச்சைகளையும், பிரச்சினைகளையும் அல்லாஹ்வின் பொறுப்பில் விட்டுவிடுவார்கள்.ஏனென்றால் இரட்சகன் அவர்களுக்குக் கொடுத்துள்ள வாக்குறுதியை அவன் பூரணமாக நிறை வேற்றுவான் என்பது அவர்களின் ஈமானாக இருந்தது.
இரட்சகனாகிய அல்லாஹ் அவனது வாக்குறுதியை அவனது வேதத்தில் கூறிக்காட்டுகின்றான்,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن تَنصُرُوا اللَّهَ يَنصُرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ
விசுவாசம் கொண்டோரே ! நீங்கள் அல்லாஹ்வுக்கு வெற்றியைக் கொடுத்தால் அல்லாஹ் உங்களுக்கு வெற்றியைத் தருவான். மேலும் உங்களுடைய பாதங்களை நிலை பெறச் செய்வான். (முஹம்மத் : 07)
இதனடிப்படையில் ஒரு முஃமின் அவன் அறிந்து வைத்துள்ள மார்க்கத்தை நிலைநாட்டுவதில் எவ்வாறான சிரமங்கள் ஏற்பட்டாலும், தான் அதனை நிலைநாட்டுவதிலிருந்து பின்வாங்காமல் அல்லாஹ்வின் வாக்குறுதியில் நம்பிக்கை கொண்டவனாக இருக்க வேண்டும். நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதியின் மீது நம்பிக்கை வைத்துள்ள ஒரு முஃமின் தான் எந்தவொரு சோதனைக்கு முகம் கொடுத்த போதும் தனக்கு அல்லாஹ் தெளிவாகத் தந்துள்ள மார்க்கத்தைப் உறுதியாகப் பின்பற்றுவதில் தயங்க மாட்டான்.
இப்பண்புகள் அஹ்லுஸ்ஸுன்னாவின் கொள்கையைச் சேர்ந்தவர்களின் அடையாளமாக இருப்பதன் காரணமாகவே அவர்கள் பூமியில் பல இடங்களில் பரந்து வாழ்ந்த போதும், மார்க்கத்தை நிலை நாட்டும் போதும் அவர்கள் அனைவரது பாதையும் ஒன்றாக அமைந்திருப்பதைக் காண முடிகிறது. ஏனெனில் அவர்கள் அனைவரும் இஸ்திகாமத் எனும் உறுதியுடன் மார்க்கத்தை நிலைநாட்டுகின்றனர். இதுவே அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களின் சிறப்பம்சமாகும்.
அவர்கள் பேசும் மொழியும் அவர்கள் வாழும் நாடுகளும் வேறுபட்டாலும் இஸ்திகாமத் என்பதில் அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டவர்கள். அதில்தான் அவர்களின் ஒற்றுமையும்,சகோதரத்துவமும் வளர்ச்சியடைகிறது. அதே போன்று இஸ்திகாமத் என்ற அளவுகோளைக் கொண்டுதான் அஹ்லுஸ்ஸுன்னாவின் எதிரிகளும், தோழர்களும இனங்காணப்படுகின்றனர். இஸ்திகாமத் என்பதே அவர்களை சேர்த்தும், பிரித்தும் வைக்கிறது.யாரெல்லாம் மார்க்கத்தை நிலைநாட்டுவதில் முந்திக் கொள்கிறார்களோ அவர்கள் அனைவரும் தோழர்களாகிவிடுவார்கள். அதே போன்று அவர்களின் எதிரிகள் யாரென்பதையும் கண்டு கொள்வார்கள்.