Skip to content
Part 2 of 4

பக்கம் 2

உம்மத்தின் பிரிவுக்குக் காரணம் ஸஹாபாக்களின் பாதையைத் தவிர்ந்து கொண்டதும் விளக்கத்தில் எல்லை மீறுவதுமாகும்

அதாவது, நபியும் ஸஹாபாக்களும் இருந்த அன்றைய காலத்தில் இந்த உம்மத்தில் பிரிவுகள் எதுவும் இருக்கவில்லை. இதனை உறுதிப்படுத்தும் முகமாக மற்றுமொரு இடத்தில் நபி (ﷺ)  அவர்கள் கூறுகிறார்கள்


                                                            لَاتَجْتَمِعُ أُمَّتِي عَلَى ضَلَالَةٍ.


'எனது உம்மத் வழிகேட்டில் ஒன்று சேரமாட்டாது.' (சுனன் திர்மிதி)


மேற்கூறப்பட்ட நபி மொழியின் அடிப்படையில், வழிகேடொன்று இந்த உம்மதினுள்ளே நுழையும் போது இந்த உம்மத் அந்த வழிகேட்டுடன் ஒன்று சேராது. அதனை விட்டும் ஒதுங்கி செல்லும் என்பதையும் நாம் புரிந்து கொள்ளமுடியும். 


அதாவது, ரஸுலுல்லாஹ் உருவாக்கிய உம்மத் வழிகேடொன்று வந்தால் அதனோடு சேர்ந்து செல்லாமல் அதனை விட்டும் ஒதுங்கி விடும். எனவே வழிகேடுகள் வருகின்ற போதுதான் பிரிவுகள் தோன்றுகின்றன என்ற உண்மையை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும். எனவேதான் ஸஹாபாக்கள் மத்தியில் வழிகேடுகள், பிரிவுகள் தோன்றவில்லை. எவர்களெல்லாம் ஸஹாபாக்களின் பாதைக்கு முரணான பாதையைத் தங்களின் பாதைகளாக எடுத்துக் கொண்டார்களோ அத்தகையோர் மத்தியில் பிரிவுகள் தோன்றுவது உறுதியாகும். 


நிச்சயமாக ஸஹாபாக்களின் பாதையை விட்டும் விலகிப் போவதுதான் வழிகேடான பாதையை உருவாக்குவதற்கான அடிப்படையாகும் என்பதை நன்கு விளங்கிக் கொள்ளுங்கள். இதன் அடிப்படையை நபி (ﷺ) அவர்கள் தெட்டத் தெளிவாகக் காட்டித் தந்து விட்டார்கள். நபி (ﷺ)  அவர்கள் கூறினார்கள்


 قَالَ رَسُوْلُ الله صلى الله عليه وسلم  كُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٍ وَكُلُّ بِدْعَةٍ ضَلاَلَةٌ وَكُلُّ ضَلاَلَةٍ فِي النَّارِ


"எல்லா புதிய விஷயங்களும் பித்அத்கள், எல்லா பித்அத்களும் வழிகேடு, எல்லா வழிகேடும் நரகத்தில்".


எனவே, மார்க்கத்தினுள் புதிதாக நுழைகின்றவைகளே பித்அத்களாகும். மாறாக ஏற்கனவே மார்க்கத்தில் இருந்தவை பித்அத்களல்ல. புதிதாகத் தோன்றுகின்ற பித்அத்கள்தான் வழிகேடுகளாகும். அந்த வழிகேடுகள்தான் நரகம் கொண்டு போய்ச் சேர்க்கும். நபி (ﷺ)  அவர்கள் கூறியதாக ஆயிஷா  (رضی اللہ عنھا) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


                          ٌقَالَ رَسُوْلُ الله صلى الله عليه وسلم  مَنْ أَحْدَثَ في أمْرِنَا مَا لَيْسَ مِنْهُ فَهُوَ رَدٌّ


"யார் எங்களது காரியத்தில் அதில் இல்லாத ஒன்றை சேர்த்து விட்டாரோ அது நிராகரிக்கப்படும்".


அதாவது யார் மார்க்கத்தில் இல்லாததை புதிதாக ஏற்படுத்தி விடுகிறார்களோ அவ்விஷயங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும். எனவே மார்க்கத்தில் உள்ள விஷயங்கள் உண்மையானதும் தூய்மையானதும் பின்பற்றப் படுவதற்குத் தகுதியானதுமாகும்.

 இதனடிப்படையில் நாம் விளங்குகின்ற போது பல உண்மைகளை அடையாளம் கண்டு கொள்ள முடியும்.