பக்கம் 3
நிச்சயமாக ஸஹாபாக்களின் காலத்தில் இவ்வாறான வழி கேடுகள் இருக்கவில்லை. அவர்கள் மத்தியில் பிரிவினை இருக்கவில்லை. கல்வியின் அடிப்படையில் நாம் பார்க்கின்ற போது இந்த மார்க்கத்தில் எப்போது புதிய விஷயங்கள் புகுத்தப்பட்டதோ அப்போதுதான் வழிகேடுகள் உருவாக ஆரம்பித்தன.
புதிதாக வந்தவைகள் வழிகேடுகள் உருவாக வழிவகுத்ததென்றால் நிச்சயமாக அவை பழையவற்றுக்கு முரணாக வந்திருக்க வேண்டும். பழையவை என்பது அன்று ரஸுலுல்லாஹ் (ﷺ) அவர்கள் காட்டிக் கொடுத்த வழிமுறையாகும்.
ரஸுலுல்லாஹ் (ﷺ) அவர்கள் எவற்றையெல்லாம் அவர்களுடைய சொல்லாலும் செயலாலும் அங்கீகாரத்தார்களோ, அதனை ஒரு வாழ்க்கை முறையாக உருவாக்கித் தந்தார்களோ அதுவே அவ்வழிமுறையாகும். தனது தூதரைப் பற்றி அல்லாஹ் அல் குர்ஆனில் கூறும் போது
وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانتَهُوا
(நம்முடைய) தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எதனை விட்டும் உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். ( அல் குர்ஆன் - 59:07 )
மேலும் அல்லாஹ் கூறுகிறான்.
لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا
(உங்களில்) அல்வாஹ்வையும் மறுமை நாளையும் ஆதரவு வைத்து அல்லாஹ்வையும் அதிகமாக நினைவு கூர்பவராக இருப்பவருக்கு அல்லாஹ்வின் தூதரிடத்தில் திட்டமாக உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல் குர்ஆன் - 33:21)
மேற்கூறப்பட்ட அல் குர்ஆன் வசனங்கள், சிறப்பான முன்மாதிரி அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கிறது என்பதை நமக்கு கூறுகின்றன. அத்தூதரின் முன்மாதிரியில்தான் மார்க்கம் நமக்கு பூரணமாகக் கிடைக்கிறது. நமது கெட்டித்தனத்தினாலும் நமது ஆராய்ச்சியினாலும் ஒருபோதும் இந்த மார்க்கம் நமக்குப் பூரணமாகக் கிடைக்காது. அத்தூதரின் முன்மாதிரிக்கு முரணாகச் செயற்படுவதன் மூலமே பிரிவினைகள் தோன்றுகின்றன.
உண்மை இவ்வாறிருக்க இன்று நாம் நபிமொழிகளைப் பெற்றுக் கொண்டு அதனைக் கொண்டு நபிவழியின் பாதையைப் பின்பற்றாமல் நபிமொழிகளால் தனி வழியை உருவாக்குவதற்கு முயற்சி செய்கிறோம். நபிமொழிகளுக்கு நமது கருத்தையும் விளக்கத்தையும் கொடுக்கிறோம். ஆனால் சரியான விளக்கமென்பது நபிமொழியினை நபிவழியில் விளங்குவதன் மூலமே அடைய முடியும்.
இன்று நபியின் வார்த்தையைக் கூறிக் கொண்டே நபி வாழாத ஒருர வாழ்க்கையை நபியின் பெயரால் ஆதாரம் கூறுகின்ற சில கூட்டங்கள் எழுந்து விட்டன. இன்று நபி ( ﷺ ) வாழ்ந்திருந்தால் அவர்களும் காற்சட்டை (ட்ரவுசர்) தான் அணிந்திருப்பார்கள் என்று நபியை தங்களின் கணிப்பில் பார்க்கின்றவர்களும் இருக்கின்றார்கள்.