Skip to content
Part 4 of 9

பக்கம் 4

வானவியல் பற்றி ஹஸன் அலி உமரி வெளியிட்ட அவசர கட்டுரைக்கு பதிலும், மறுப்புகளும்

மனிதர்கள் இவ்வாறு பிரித்ததை வைத்து நாம் மார்க்க சட்டங்களை கூற முடியாது. மாறாக மார்க்கம் இவ்விரண்டையும் வானவியல், வானசாஸ்திரம் என்று பிரிக்காமல் பொதுவாக நட்சத்திர கல்விக்கு தீர்ப்பு என்று கூறியதை தான் நாம் மார்க்கத் தீர்ப்பாக சுமக்க முடியும். எனவே மனிதர்கள் வானவியல், வானசாஸ்திரம் என்று பிரித்து விளங்கியதற்காக அதன் மார்க்கத் தீர்ப்பு மாறிவிடாது. இதனை தெளிவாக பின்வரும் நபிமொழி நமக்கு எடுத்துரைக்கின்றது.

قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏‏ مَنِ اقْتَبَسَ عِلْمًا مِنَ النُّجُومِ اقْتَبَسَ شُعْبَةً مِنَ السِّحْرِ

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்,

யார் நட்சத்திரன் மூலம் ஞானத்தை பெற்றுக் கொள்கிறாரோ, அவர் தன்னை சூனியத்தின் ஒரு பகுதியில் சம்பந்தமாக்கி விட்டார். (சுனன் இப்னுமாஜா)

ஷெய்க் அல்பானி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இதனை ஆதரப்பூர்வமானது என்று தீர்ப்பளித்துள்ளார்கள். மேலும் இமாம் முஸ்லிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் நிபந்தனைக்கு உட்பட்ட ஸஹீஹான ஹதீஸாகும்.

‘النُّجُومِ - நுஜூம்' என்றால் பூமிக்கு வெளியே உள்ள அனைத்தையும் அதாவது சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கோள்கள் போன்றவற்றை குறிப்பதற்கு பயன்படுத்தும் சொல்லாகும். எனவே நட்சத்திரத்தின் கல்வியான வானவியல், வானசாஸ்திரம் ஆகிய இரண்டையும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சூனியத்தின் ஒரு பகுதி என்று கூறிவிட்டார்கள்.

சகோதரர்களே! நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் எச்சரிக்கையோ, அல்-குர்ஆனின் எச்சரிக்கைகளோ வானவியல், வானசாஸ்திரம் என்று பிரித்து அதனுடைய எச்சரிக்கையை கொடுக்கவில்லை. மாறாக அல்-குர்ஆனும் அஸ்-ஸுன்னாஹ்வும் பொதுவாக 'النُّجُومِ - நுஜூம்' நட்சத்திரத்தின் கல்வியான வானவியல், வானசாஸ்திரம் ஆகிய இரண்டையும் ஒன்றாக தான் தீர்ப்பளிக்கின்றது. இவை இரண்டிற்கும் பொதுவான சட்டம், சூனியத்தின் ஒரு பகுதியாகும். இதனை நாங்கள் ஹதீஸின் வார்த்தை மூலமாக கூறுகின்றோம்.