பக்கம் 3
வானவியல் பற்றி ஹஸன் அலி உமரி வெளியிட்ட அவசர கட்டுரைக்கு பதிலும், மறுப்புகளும்
தவ்ஹீதுர் ருபூபிய்யா என்பது அல்லாஹ்வை அவனுடைய செயல்பாடுகளில் ஏகத்துவப்படுத்துவதாகும். உதாரணத்திற்கு அல்லாஹ் படைக்கின்றவன், உணவளிப்பவன், உயிர் கொடுப்பவன், மரணத்தை கொடுப்பவன் ஆகிய அவனுடைய செயற்பாடுகளில் அவன் தனித்துவமானவன். அதே போன்று இல்முல் கைப் (மறைவான கல்வி)யை அவன் யாருக்கு கற்றுக்கொடுத்தானோ ( தூதர்களுக்கு வஹியாக அறிவித்தது ) அதை அவர்களை தவிர மற்ற அனைத்தையும் அவன் மட்டுமே அறிந்தவன்.
அல்லாஹ் தக்தீர் (நிர்ணயம்) செய்தான் என்பது அல்லாஹ்வுடைய செயலாகும். அது அல்லாஹ் மட்டுமே அறிந்த மறைவான கல்வி (இல்முல் கைப்) என்பதை நாம் விளங்கி வைத்திருக்கின்றோம். சூரியனும் சந்திரனும் நிற்கும் இடங்களை தக்தீர் ( நிர்ணயம்) செய்ததில் அல்லாஹ் தனித்துவமானவன் ஆவான். இது தான் அல்லாஹ்வை அவனுடைய செயற்பாடுகளில் ஏகத்துவப்படுத்துவதாகும். அல்லாஹ் நிர்ணயம் செய்த தங்குமிடங்களை வஹி (அல்-குர்ஆன், அஸ்-ஸுன்னாஹ்) மூலமாக அல்லாஹ் அறிவித்திருந்தால் தான் மனிதர்களால் அறிய முடியும்.
இதனை தவிர அல்லாஹ் நிர்ணயம் செய்த இடங்களை (வானவியல்) வேறு வழிமுறையில் யாராலும் அறிய முடியாது. அல்லாஹ்வுடைய தக்தீர் என்பது அல்லாஹ் மட்டுமே அறிந்த மறைவான கல்வி (இல்முல் கைப்) ஆகும். எனவே இதனை யூத, கிறித்தவர்களின் வானவியல் கல்வியின் மூலமாக கண்டு பிடித்துவிடுவோம் என்று கூறுவது மடமையும், மிக பெரிய இறை நிராகரிப்புமாகும். தவ்ஹீதை அறியாதவர்களால் இது இறை நிராகரிப்பு என்பதை விளங்க முடியாது. அல்லாஹ் இவ்வாறான வழிகேடான வழிமுறையில் இருந்து நம்மை பாதுகாக்க வேண்டும்.
3. நுஜூம் - நட்சத்திரக் கல்வி என்பது வானவியலையும், வானசாஸ்துரத்தையும் குறிக்குமா?
பதில் :
அல்லாஹ்வின் நல்லடியார்களே! வானவியல், வானசாஸ்திரம் என்று மனிதர்கள் தான் பிரித்துக் கொண்டார்கள். மாறாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும், ஸஹாபாக்களும் இவ்விரண்டையும் இல்முந் நுஜூம் (நட்சத்திரத்தின் கல்வி) என்று தான் குறிப்பிட்டுள்ளார்கள். நமது மார்க்கம் இவ்விரண்டையும் (வானவியல், வானசாஸ்திரம்) நட்சத்திரத்தின் கல்வி என்றும், அதில் பேசுவது சூனியத்தில் ஒரு பகுதி என்றும் பொதுவாக அடையாளமிட்டுக் காட்டுகிறது.