பக்கம் 1
வானவியல் பற்றி ஹஸன் அலி உமரி வெளியிட்ட அவசர கட்டுரைக்கு பதிலும், மறுப்புகளும்
வானவியல் பற்றி ஹஸன் அலி உமரி வெளியிட்ட அவசர கட்டுரைக்கு பதிலும் மறுப்புகளும்
ஷெய்க் யஹ்யா ஸில்மி அஸ் ஸைலானி ஹபிழஹுல்லாஹ்
بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم
الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد
1. சகோதரர் ஒருவர் ஒரு ஆடியோவிற்கு "வானவியல் கல்வி இஸ்லாத்தை விட்டு வெளியேற்றும் கல்வி" என்று தவறாக தலைப்பிட்டதை வைத்து ஹசன் அலி உமரி அவர்கள் அதனை அவசரமாக ஷெய்க் யஹ்யா அவர்களின் நவீன ஃபத்வா என்று ஒரு கட்டுரையையே பரப்பினார்.
பதில் :
அந்த தவறான தலைப்பு மறுதினமே திருத்தப்பட்டு அனைத்து சமூக வலைத்தளங்களிலும் "வானவியல் கல்வியும் இஸ்லாமிய தீர்ப்பும்" என்ற சரியான தலைப்புடன் பகிரப்பட்டது. தவறாக போடப்பட்ட தலைப்பை வைத்து கட்டுரையை பரப்பும் சகோதரர் ஹசன் அலி உமரி அவர்கள் சரியான தலைப்பை கவனிக்காமல் மீண்டும் எங்களிடமே சரியான தலைப்பு என்ன? என்று கேள்வியாக கேட்கின்றார்.
2. ஹசன் அலி உமரி அவர்கள் "ஃபத்ஹுல் பாரியில் வானவியல் கல்வி குஃப்ர் என்று எந்த உலமாவும் குறிப்பிடவில்லை" என்றும், எந்த நூற்களிலும் உங்களால் அதனை எடுக்க முடியாது என்றும் ஷெய்க் யஹ்யாவிற்கு முன் எந்த ஆலிமும் கூறவில்லை என்றும் கூறுகின்றார்.
பதில் :
இதனை மறுப்பதற்கு ஃபத்ஹுல் பாரியில் வானவியலை குஃப்ர் என்று அறிஞர்கள் கூறியதை விரிவாக கீழே குறிப்பிட்டுள்ளோம்.
வானவியல் மற்றும் வானசாஸ்திரம் (ஜோதிடம்) ஆகிய இரண்டையும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிரித்து கூறவில்லை. மாறாக இவ்விரண்டையும் நட்சத்திரக் கல்வி ( النُّجُومَ ) என்று பொதுவாக தான் கூறியிருக்கின்றார்கள். இதனை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் நபிமொழியின் வார்த்தையில் இருந்து நாம் கூறுகின்றோம். ஆனால் சகோதரர் ஹசன் அலி உமரி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நட்சத்திரக் கல்வி ( النُّجُومَ ) என்று ஹதீஸில் பொதுவாக கூறியதை வானசாஸ்திரக் கல்வியை (ஜோதிடத்தை) தான் குறிக்கிறது என்று குறிப்பாக கூறுகிறார். இவர் இவ்வாறு கூறுவதற்கு அல்குர்ஆன், அஸ்-ஸுன்னாஹ்வில் இருந்து ஆதாரத்தை முன்வைக்கவில்லை.
சகோதரர்களே ! மார்க்கத்தில் பொதுவாக கூறப்பட்ட ஒரு விஷயத்தை குறிப்பாக்க வேண்டும் என்றால் அல்குர்ஆன், அஸ்-ஸுன்னாஹ்வின் மூலமாக தான் குறிப்பாக்க வேண்டும். மாறாக அல்குர்ஆனும், அஸ்-ஸுன்னாஹ்வும் பொதுவாக கூறிய ஒரு விஷயத்தை மனிதர்கள் பிரித்து விளங்கியதை கொண்டு குறிப்பாக்குவது மிகப் பெரிய தவறாகும்.