Skip to content
Part 3 of 5

பக்கம் 3

உழ்ஹிய்யா(குர்பானியின்) சட்டங்கள்

உழ்ஹிய்யா சக்தி உள்ளவர்களுக்கு கடமை என்பதை பின்வரும் ஹதீஸ்களின் அடிப்படையில் உலமாக்கள் தீர்ப்பளித்தார்கள்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்,

يا أيها الناس ! على كل أهل بيت في كل عام أضحية

மக்களே ! ஒவ்வொரு வீட்டாரும் ஒவ்வொரு வருடமும் உழ்ஹிய்யா கொடுக்க வேண்டும். (அஹ்மத், அபூ தாவூத், நஸாஈ)

மற்றுமொரு ஹதீஸில், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறியதாக அபூ ஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்,

قال رسول الله صل الله عليه وسلم : من وجد سعة فلم يضحّ ، فلا يقربن مصلانا

யாருக்கு சக்தியிருந்தும் உழ்ஹிய்யா கொடுக்கவில்லையோ அவர் நமது தொழுமிடத்தை நெருங்க வேண்டாம். (முஸ்னத் அஹ்மத், இப்னு மாஜா)

இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் சக்தி உள்ளவர்கள் மீது உழ்ஹிய்யா கொடுப்பது கடமையாகிறது. சக்தி என்பது ஒரு மிருகத்தை வாங்குவதற்கான வசதியைக் குறிக்கிறது. ஒரு குடும்பத்தில் பலர் இருக்கும் நிலையில் அவர்களில் ஒருவராவது சக்தி பெற்றிருந்தால் அக்குடும்பத்துக்கு உழ்ஹிய்யா கடமையாகிறது அல்லது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு பிராணியை வாங்குவதற்கு முடியுமானால், அவர்களுக்கும் அதனை நிறைவேற்றுவது கடமையாகும்.

(குறிப்பு : இங்கு “குடும்ப உறுப்பினர்கள்” என்பது “இன்னும் திருமணம் ஆகாமல் இருப்பவர்(களை)” குறிக்கிறது. ஏனென்றால் அவர்களில் ஒருவர் திருமணம் செய்துவிட்டால், மற்றொரு குடும்பமாகவே அவர்கள் கருதப்படுவார்கள்)

உழ்ஹிய்யா பிராணியில் ஆகக் குறைந்த பட்சம் ஒரு ஆட்டை வாங்கி அறுப்பதற்கான சக்தியைப் பெற்றிருக்க வேண்டும். அது மட்டுமின்றி உழ்ஹிய்யா பிராணியில் மிகச் சிறந்தது கொம்புள்ள ஆடாகும்.