பக்கம் 1
உழ்ஹிய்யா(குர்பானியின்) சட்டங்கள்
உழ்ஹிய்யாவின் சட்டங்கள்
ஷெய்க் யஹ்யா ஸில்மி அஸ் ஸைலானி ஹபிழஹுல்லாஹ்
بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم
الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد
ஷரீஅத்தில் உழ்ஹிய்யா கொடுப்பது பற்றிய நிலை என்ன ?
உழ்ஹிய்யா கொடுப்பது குடும்பத்தை உடையவர்களின் (சக்தி இருந்தால்) மீது கடமையாகும்.
இஸ்லாத்தின் பார்வையில் குடும்பம் என்பதன் வரைவிலக்கணம் என்ன?
குடும்பம் என்பது திருமணம் மூலம் அமைவதாகும். ஆண் அல்லது பெண் திருமணம் செய்யாமல் பெற்றோருடன் இருக்கும் போது அவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகப் கருதப்படுவாா்கள். எப்பொழுது பெற்றோருடன் இருக்கும் பிள்ளைகளுக்கு திருமணம் நடைபெறுகின்றதோ அப்பொழுது அந்த பிள்ளைகள் தனியொரு குடும்பமாகக் கருதப்படுவாா்கள்.
ஒரு குடும்பத்தில் இருந்து பிரிவது என்பது வீட்டிலிருந்து பிரிவதோ அல்லது இடத்தை விட்டுப் பிரிந்து போவதோ அல்லது வாழ்க்கையில் இருந்து பிரிந்து போவதோ அல்ல. மாறாக, ஒன்றாக இருந்தவர்களில் ஒருவர் திருமணம் செய்துவிட்டால் மற்றுமொரு குடும்பம் உருவாகிறது. இவ்வாறுதான் குடும்பம் என்பது கணிக்கப்படுகிறது.
ஒருவருக்கு பல மனைவிகள் இருந்தாலும், அவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு குடும்பமாகவே கருதப்படுவாா்கள். இவ்வடிப்படையில் உழ்ஹிய்யா என்பது ஒவ்வொரு குடும்பமும் (சக்தி இருந்தால்) நிறைவேற்ற வேண்டிய கடமையாகும்.
அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கும் பின்வரும் ஹதிஸின் அடிப்படையில் ஒவ்வொரு குடும்பமும் உழ்ஹிய்யா கொடுக்க வேண்டும் என்ற சட்டம் எடுக்கப்படுகிறது.
அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள்,
أبي أيوب الأنصاري قال : كان الرجل في عهد رسول الله صل الله عليه وسلم يضحي بالشاة عنه وعن أهل بيته . أخرجه ابن ماجه والترمذي
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் ஒருவர் தனக்காகவும், தன் குடும்பத்துக்காகவும் ஒரு ஆட்டை உழ்ஹிய்யா கொடுப்பவராக இருந்தார். (இப்னு மாஜா, திர்மிதி)
ஷெய்க் நாஸிருத்தீன் அல் அல்பானி (ரஹிமஹுல்லாஹ்) அவா்கள் கூறுகிறார்கள்,
இந்த ஹதீஸின் ஸனத் இமாம் முஸ்லிமின் நிபந்தனைக்கு அமைய ஸஹீஹாக அமைந்துள்ளது.