பக்கம் 3
சிறப்பான 10 நாட்களும் , தொடர்ச்சியாக நோன்புகள் வைக்காமல் இருப்பதும்
பலஹீனமான ஹதீஸ் செய்திகளின் அடிப்படையில், "பத்து நாட்கள் நோன்பு" என்று பல பத்வாக்கள் இருகின்றன, எனவே, ஆதாரத்தின் அடிப்படையில் செயல்படுவதில் கவனமாக இருந்துக் கொள்ளுங்கள்.
இந்த சிறப்பான நாட்களில் வருவது தான் அரஃபா நாள். அரஃபா நாள் பாவங்களுக்கு மன்னிப்பும் ,நரக விடுதலையும் கிடைக்கும் உயரிய நாளாகும்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள், “அல்லாஹ் தனது அடியார்களை நரகிலிருந்து அதிகமாக விடுதலை செய்யும் நாள் அரஃபா நாளாகும். இதைவிட வேறு எந்த நாட்களிலும் இவ்வாறு விடுதலை செய்வதில்லை. இந்நாளில் அல்லாஹ் இறங்கி வந்து, எனது அடியார்கள் என்ன விரும்புகிறார்கள்? ( கேட்பதைக் கொடுப்பதற்கு சித்தமாக உள்ளேன்.) என்று தனது வானவர்களிடம் பெருமையோடு கூறிக்கொள்வான்” என ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அறிவிக்கிறாா்கள் (முஸ்லிம்)
அரஃபா நாளின் சிறப்புக்கு இது ஒன்றே போதுமானது. ஹஜ்ஜின் முக்கிய கிரியைகளில் ஒன்று அரஃபா மைதானத்தில் ஹாஜிகள் அனைவரும் ஒன்று கூட வேண்டும். இது அரஃபா நாளில் நடைபெறும்.
'அரஃபா தினத்தன்று நோன்பு நோற்பதன் மூலம் ஒருவருடைய கடந்த ஒருவருட கால (சிறிய) பாவங்களும், அடுத்து வரும் ஒருவருட கால (சிறிய) பாவங்களும் மன்னிக்கப்படும் என நான் கருதுகின்றேன்' என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)
எனவே, இந்நாளில் ஹஜ்ஜுக்கு செல்லாத மற்ற உலக முஸ்லிம்களுக்கு அரஃபா தின நோன்பு மிகவும் வலியுறுத்தப்பட்டதாகும்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.