பக்கம் 2
சிறப்பான 10 நாட்களும் , தொடர்ச்சியாக நோன்புகள் வைக்காமல் இருப்பதும்
(துல்ஹஜ் மாதத்தின் முதல்) பத்து நாட்களில் மேற்கொள்ளப்படும் அமல்களைவிட அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானதும், மகத்தானதும் வேறு எதுவும் இல்லை. எனவே அந்த நாட்களில் தஹ்லீல் (லா இலாஹ இல்லல்லாஹ்), தக்பீர் (அல்லாஹுஅக்பர்), தஹ்மீது (அல்ஹம்து லில்லாஹ்) அதிகமாகக் கூறுங்கள் என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (தப்ரானி)
இந்த சிறப்பான 10 நாட்களில் நோன்பு வையுங்கள் என்றும், இதற்கு ஆதாரமாக சில பலஹீனமான ஹதீஸ்களை சிலர் சுட்டிக் காட்டுகின்றனர்.
ஆஷூராவுடைய நோன்பு, (துல்ஹஜ் மாதத்தின் முதல்) பத்து நாட்கள் நோன்பு நோற்பது, ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, ஃபஜர் தொழுகைக்கு முன்னால் உள்ள இரண்டு ரக்அத்கள் இந்த நான்கு நல்லறங்களையும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் விட்டதே இல்லை என ஹஃப்ஸா ரலியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறாா்கள் (நஸாயீ , இப்னு ஹிப்பான், முஸ்னது அஹ்மது, தப்ரானீ )
இந்தச் செய்தி பலவீனமான செய்தியாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் அபூ இஸ்ஹாக் அல்அஷ்ஜயீ என்பவர் இடம் பெறுகின்றார். இவர் நம்பகமானவர் இல்லை என்று இமாம் சைலவி (ரஹீமஹுல்லாஹ்) அவா்கள் "நஸ்பூர் ராயா" என்ற கிதாபில் கூறுகிறார்கள். மேலும் இதை போன்று இமாம் நாசிருத்தீன் அல்பானி (ரஹீமஹுல்லாஹ்) அவா்களும் "இர்வாகுள் கலீல்" என்ற அவர்களுடைய கிதாபில் இது பலவீனமான செய்தியாகும் என்று தீர்பளித்துள்ளார்கள்.
இந்த பத்து நாட்களில் செய்யக்கூடிய அமல்களாக தொடர்ச்சியாக நோன்பு வைப்பது, அதனுடைய இரவை வணக்கங்களால் கழிப்பது , அதிகமாக திக்ருகள் செய்வது என்று சுட்டிக் காட்டி ஆர்வமூட்டுவது கூடாது. ஏனெனில் அந்த அறிவிப்புக்கள் பலஹீனமானதாகும் என்று இமாம் இப்னு ரஜப் அல் ஹன்பலி (ரஹீமஹுல்லாஹ்) அவர்கள் "லதாயிப்" என்ற கிதாபில் குறிப்பிடுகிறார்கள்.
இன்னும், பத்து நாட்கள் நோன்பு வைப்பது என்ற வாசகமே தவறாகும். ஏனெனில், பத்தாவது நாள் பெருநாள் ஆகும். பெருநாள் நோன்பு வைப்பது தடை செய்யப்பட்ட நாள். மேலும், சுன்னத்தான நோன்புகள் நோற்பதற்கு மிகவும் கடுமையாக தடைசெய்யப்பட்ட நாள் சனிக்கிழமை ஆகும். இதுவும், இந்த பத்து நாட்களில் அமைந்து விடும். எனவே, அந்த சனிக்கிழமை நாளும் நோன்பு வைக்க முடியாது.
இந்த சிறப்பான காலத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் காட்டித்தந்த அமல்களை செய்வதுதான் அல்லாஹ் சுபஹானஹுதாலா விடம் இருந்து கூலியை பெற்றுத்தருமே தவிர பித்அத்கள் (புதியதாக உருவாக்கியவை) அல்ல.
(துல்ஹஜ் மாதத்தின்) பத்து நாட்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நோன்பு நோற்று நான் கண்டதில்லை' என்று ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்)
எனவே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எதனை தவிர்ந்து கொண்டாரோ அதனை நாமும் தவிர்ந்துக் கொள்வோம். இந்த விடயத்தில் நாமும் தவிர்ந்து கொள்வதுதான் நபி வழி ( சுன்னாஹ் ) ஆகும்.