Skip to content
Part 10 of 10

பக்கம் 10

ஸலப் உலமாக்கள் அகீதாவுக்கு முன்னுரிமை அளிப்பது ஏன்?

சமூக அந்தஸ்தைக் கொண்டு உலகில் நமக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்று நாம் நமது வாழ்வை அமைத்துக் கொள்ளக் கூடாது. அவ்வாறு அமைத்து கொண்டால் அல்லாஹ்வின் சட்டத்தை நிலைநாட்டும் பாக்கியம் நம்மை விட்டும் அகன்று விடும். அதன் விளைவாக அல்லாஹ் ஏவியதை நிலைநாட்ட முடியாமலும், அல்லாஹ் தடுத்ததை தவிர்ந்து கொள்ள முடியாமலும் போய்விடும். மேலும், சுன்னாவை விட்டுவிடுவதற்கு காரணங்கள் பல கூற வேண்டிய துர்ப்பாக்கியசாலிகளாக ஆகிவிடுவோம். இது நரகத்தின் பாதைக்கு இட்டுச் செல்கின்ற காரியங்களாகும். இது ஒருபோதும் வெற்றியாக அமைய முடியாது.

எனவே, நாம் அனைவரும் உண்மையான வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்கு

  • அல்லாஹ்வின் நம்பிக்கையைத் தரமாக நமது இதயத்தினுள் பதிய வைக்க வேண்டும்
  • அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பின்பற்றுகின்ற சூழலை நமக்காக அமைத்துக் கொள்ள வேண்டும்.
  • இன்பத்திலும், துன்பத்திலும் அல்லாஹ்வின் மார்க்கத்தை நிலைநாட்ட வேண்டும்.

நம்முடைய நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த வெற்றியை விடவும் பெரிய வெற்றி யாருக்குக் கிடைக்க முடியும்?

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை அவர்களது குடும்பமும், கோத்திரத்தாரும், அவர்கள் வாழ்ந்த சமூகமும் எதிர்த்து நின்றனா். அவ்வாறு இருந்தும் அல்லாஹு தஆலா தன் தூதருக்கு வெற்றியைக் கொடுத்தான். சமூகத்தின் எதிர்ப்பின் காரணமாக மக்காவில் சத்தியம் வளர்வதற்கு இடம் கிடைக்காவிட்டாலும் முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) என்ற நபித் தோழரை யத்ரிப் (அன்றைய மதீனா) என்ற பிரதேசத்துக்கு அனுப்பி, அந்நபித்தோழர் மூலம் யத்ரிப் என்ற பூமியில் வாழ்ந்த சமூகத்துக்கு மத்தியில் மார்க்கத்தைப் பரப்பி விடுவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான்.

அதன் பின்னர், நபிகளாரும் யத்ரிபுக்கு ஹிஜ்ரத் சென்று அவர்களின் அழைப்பின் மூலமும் இடமெங்கும் அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பரப்பினாா்கள். மீண்டும் மக்கா திரும்பி அங்குள்ள அல்லாஹ்வின் வீடான கஃபாவை அனைத்து இணை வைப்பை விட்டும் சுத்தப்படுத்தி இஸ்லாத்தை அந்த மண்ணில் நிலைநாட்டினார்கள். இதுவே தனது தூதருக்கு அல்லாஹ் கொடுத்த உன்னதமான வெற்றியாகும்.

இஸ்லாத்தின் இன்று வரையுள்ள வரலாற்றைப் பார்க்கும் பொழுது எந்தவொரு சுன்னாவின் இமாம்களும் அவர்களுடைய சமூகத்தில் சர்ச்சைகளுக்கு முகம் கொடுக்காமல் வாழவில்லை. அவர்கள் கொடுத்த அனைத்து தீர்ப்புகளையும் அவர்களின் சமூகங்கள் ஏற்றுக் கொண்டு வரவேற்கவில்லை. மாறாக பல மறுப்புகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் மத்தியில் அவர்கள் மார்க்கத்தை நிலைநாட்டி அதனைத் துணிவோடு எத்திவைத்தார்கள்.

அன்று சுன்னாவின் இமாம்கள் கொடுத்த குரல்கள் இன்று இஸ்லாமிய உம்மத்தின் தீர்ப்புகளாக மாறிவிட்டன. அவர்கள் அன்று பின்பற்றிய நடைமுறைகள் இன்று இஸ்லாமிய உம்மத் பின்பற்ற வேண்டிய அடிச்சுவடுகளாக மாறிவிட்டன. அவர்கள் அன்றும் வெற்றியோடு வாழ்ந்தார்கள். அவர்களின் குரல்கள் இன்றும் வெற்றியோடு வாழ்கிறது. இந்த அனைத்து வெற்றிகளுக்கும் காரணம் அவர்கள் தூய கொள்கையுடனும் அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையுடனும் வாழ்ந்ததாகும்.

எனவேதான் அந்த வெற்றியை எல்லாக் காலங்களிலும் இந்த இஸ்லாமிய உம்மத் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக உலமாக்கள் அகீதாவைப் பற்றிய கல்வியை மக்களுக்கு அதிகம் கொடுக்கின்றனர். அகீதவைப் பற்றிக் கற்பதன் மூலம் நாம் நேர்வழியை அடைந்து கொள்வதோடு, நேர்வழிக்கு முரணான வழிகேடுகளின் அடிப்படைகளையும் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்து கொள்வதன் மூலம் அனைத்துக் காலங்களிலும் வழிகேட்டின் பிடியிலிருந்து தப்பி வாழ முடியும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.