Skip to content
Part 9 of 10

பக்கம் 9

ஸலப் உலமாக்கள் அகீதாவுக்கு முன்னுரிமை அளிப்பது ஏன்?

நமது முஸ்லிம் சகோதரர்களுக்கு நாம் கொள்கையினை அடிக்கடி நினைவுபடுத்துவது அவசியமாகும். அகீதா கொள்கை என்பது நமது சமூகத்தின் முன்னால் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தப் பட்டால்தான் சிலராவது தங்களின் வாழ்வில் அல்லாஹ்வின் சட்டத்தைத் தவிரவுள்ள வேறொரு சட்டத்தை நிலைநாட்டமால், அல்லாஹ்வுக்கு இணைவைப்பதை விட்டும் விலகியிருப்பதற்கான வாய்ப்பு அமைகின்றது. மேலும் தங்களின் வாழ்வில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அல்லாஹ்வின் சட்டத்தை நிலைநாட்டுகின்ற தூய அடியார்களாக அவர்களை அக்கொள்கை மாற்றி வைக்கும்.

நம்முடைய சமூகம் அல்லாஹ்வின் மீதான ஏகத்துவத்தை விளங்காத சமூகமாக இருக்கிறது. இதே போன்றுதான் வரலாறு நெடுகிலும் இந்த முஸ்லிம் சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அல்லாஹ் யாருக்கு அருள் புரிந்தானோ அவர்களைத் தவிர. இஸ்லாமிய வரலாற்றில் யாரெல்லாம் அல்லாஹ்வின் திருப்திக்காக வாழ்வதற்கும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை மட்டுமே பின்பற்றுவதற்குத் தகுதியானவராக எடுப்பதற்கும் உறுதி கொண்டார்களோ அத்தகைய கொள்கைவாதிகள்தான் அனைத்துக் காலங்களிலும், தங்களின் வாழ்வில் அனைத்து அம்சங்களிலும், மார்க்கத்தின் அனைத்து சட்டங்களையும் நிலைநாட்டினார்கள். அவர்கள் சுமந்த கொள்கையின் பிரதிபலிப்பை அவர்களின் சொந்த வாழ்விலும், குடும்ப வாழ்விலும், வியாபாரத்திலும், சமூக வாழ்விலும், அவர்களின் சிந்தனையிலும் காண முடிந்தது. மார்க்கம் வகுத்துத் தந்த எல்லைதான் அவர்களின் செயற்பாட்டின் எல்லையாக இருந்தது. அவர்களின் சமூகம் விரும்பினாலும், வெறுத்தாலும்  மார்க்கத்தின் சட்டமென்றால் அதனை நிலைநாட்டுவதில் முந்திக் கொண்டவர்களாக அவர்கள் இருந்தார்கள்.

அவ்வாறு கொள்கைவாதிகளாக அவர்கள் வாழ்ந்ததன் காரணமாகவே, அவர்களில் தனி மனிதனாக வாழ்ந்தவர்களும் தங்களின் செயல்களினால் அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்கள். அத்தோடு அல்லாஹ்வின் உதவியையும் பெற்றுக் கொண்டார்கள். இந்த பூமியில் கொள்கையை மிகச் சிறப்பாகச் சுமந்து செயற்பட்ட ஸஹாபாக்களும், அவர்களைப் பின்தொடர்ந்த தாபிஈன்களும், அவர்களைப் பின்தொடர்ந்தவர்களும் தங்களோடு கொள்கையைச் சுமந்து கொண்டு பூமியின் பல பகுதிகளுக்கும் அக்கொள்கையை எத்தி வைத்தார்கள்.

அவர்கள் சென்ற இடத்தில் தனி மனிதனாக வாழ்ந்த போதும், மாா்க்கத்தை பின்பற்றுவதற்கு முழு சமூகமே எதிர்ப்பு காட்டினாலும்  அவர்கள் வெற்றி பெற்ற மனிதர்களாகவே வாழ்ந்தார்கள். வெற்றி என்பது பெயரையும், புகழையும், அந்தஸ்தையும் பெற்றுக் கொள்வது இல்லை. மாறாக வெற்றி என்பது அல்லாஹ்வின் திருப்தியை அடைவதும், இந்த பூமியில் மார்க்கத்தை நிலைநாட்டுவதும், அல் குர்ஆனையும் சுன்னாவையும் நிலைநாட்டுவதுமாகும். இதுதான் அன்று இந்த உம்மத்தில் கொள்கையைச் சுமந்தவர்கள் வாழ்ந்த முறையாகும்.

இன்று நாம் வாழும் காலத்தில் எமது சமூகத்திலும், குடும்பத்திலும் உள்ள எதிர்ப்புகளுக்கு மத்தியில் இஸ்லாத்தின் சட்டதிட்டங்களை நிலைநாட்டுவதற்கு அல்லாஹ் நமக்கு சூழலை அமைத்துத் தந்து விட்டால் அதுவும் நாம் பெற்றதொரு வெற்றியாகும். இதனையும் விடப் பெரியதொரு வெற்றி வேறு எதுவாகவும் இருக்க முடியாது. ஏனெனில், அல்லாஹ்வின் சட்டத்தை நிலைநாட்டும் சூழலில் நாம் வாழும் போது அது நம்மை சுவனத்தை நோக்கி நெருக்கி வைக்கிறது. சுவனத்தைச் சென்றடைவதை விடவும் மகத்தான வெற்றி வேறு என்னதான் இருக்க முடியும்.