பக்கம் 7
ஸலப் உலமாக்கள் அகீதாவுக்கு முன்னுரிமை அளிப்பது ஏன்?
அகீதாவை நோக்கிய அழைப்புப் பணியின் மூலம்தான் அல்லாஹ்வுக்குக் கீழ்படிந்து நடக்கக் கூடிய தூய்மையான அடிமைகள் உருவாகின்றனர். மாறாக, அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையைப் பற்றிய அறிவைப் பெறாததன் காரணமாக இரட்சகனுக்கு கீழ்படியும் பண்பும், அவனுக்கு அஞ்சி நடக்கும் தன்மையும், நேர்வழியில் மட்டுமே செல்ல வேண்டும் என்ற எண்ணமும், வழிகேடுகளை விட்டும் தூரமாக வேண்டும் என்ற எண்ணமும் மனிதர்களிடத்தில் இல்லை. இதனால் அந்த மனிதர்கள் உண்மையைத் தெரிந்த பின்னாலும், அதனைப் பின்பற்றும் மனிதர்களாக இருக்க மாட்டார்கள். மேலும் அவா்கள் அறிந்தவற்றைக் கொண்டு அமல் செய்கின்றவர்களாக இருக்க மாட்டார்கள். இத்தகைய மனிதர்கள் அகீதாவை உறுதியாக பெற்றுக் கொண்டவர்களாக ஆகும் வரை, அவர்களின் செயற்பாடுகளில் எந்த முன்னேற்றத்தையும் காண முடியாது. கொள்கை உறுதியாக இருக்கும் அளவுக்கு பின்பற்றும் பண்பு அதிகரிக்கும். கொள்கை பலவீனமாக இருக்குமளவுக்கு பின்பற்றும் போக்கு மிக அரிதாகவே காணப்படும். இதில் நூல்கள் பலவற்றைக் கற்றுத் தேரிய பேரறிஞர்களும் விதிவிலக்கானவர்களல்ல. அவர்களிடத்திலும் அவர்கள் கொள்கையைத் தரமாகப் புரிந்திருந்தால்தான் அவர்களின் செயற்பாட்டிலும் உறுதி இருக்கும். இதன் காரணமாகவே அறிஞர்கள் என்று சொல்லப்படக் கூடியவர்களிடத்தில் கொள்கையினைப் பற்றிய அறிவு இல்லாத போது அவர்களின் வாழ்வில் பின்பற்றுதலின் பலவீனத்தையும், மார்க்கத்தை விட்டுக் கொடுக்கும் போக்கையும், அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்காத தன்மையையும் நாம் கவனிக்க முடியும்.
இன்னுமொரு விதமாகக் சொன்னால், மனிதர்களின் பிக்ஹ் விடயத்தில் காணப்படுகின்ற குறைபாட்டுக்கான காரணமும் அவர்களின் அகீதாவில் குறைபாடு இருப்பதாகும். அதாவது,
- அல்லாஹ்வின் நம்பிக்கை பற்றிய கல்வியில் உள்ள குறைபாடு
- ஸஹாபாக்கள் சென்ற பாதைதான் நேர்வழி என்பதை உறுதியாக நம்புவதில் உள்ள குறைபாடு
இந்த அடிப்படையான குறைபாட்டின் காரணமாக, அக்குறைபாட்டைக் கொண்ட மனிதன் கொடுக்கின்ற பிக்ஹின் தீர்ப்பிலும் குறைபாடுகள் அமைந்துவிடும்.
அது மட்டுமின்றி வட்டி போன்ற ஹராமானவற்றை அது ஹராம் என்று தெரிந்த பின்னாலும் தனது வாழ்வில் ஒரு கஷ்டம் வந்ததற்காக, அந்தக் கஷ்டத்தைக் காரணம் காட்டி ஹராமானதைச் செய்வதற்கும் அந்த மனிதன் தயங்கமாட்டான். அதனைத் தவிர்ந்து கொள்வதற்காக வேறு மாற்று வழிகள் உள்ளதா என்பதையும் கவனிக்கவும் மாட்டான். கஷ்டத்தில் பொறுமையோடு இருந்து தனது இரட்சகனிடம் பிரார்த்தனை செய்ய மாட்டான். அல்லாஹ்வின் மீதான அச்சம் இவனை விட்டும் போய்விட்டது. தனக்கு ஏற்பட்ட துன்பத்திலிருந்து தப்பிப்பதே அவனது நோக்கமாக அமைந்து விட்டது. இந்நிலையில் அவன் இருக்கும் போது அவன் தனது தொழுகையில், (எங்கள் இரட்சகனே !) உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம் என்று பிரார்த்திப்பதில் எந்தவித அர்த்தமுமில்லை.
அல்லாஹ்விடம் மட்டுமே உதவியைத் தேடுகிறேன் என்று சொல்லும் மனிதன் அல்லாஹ்வுடனும் அல்லாஹ்வின் தூதருடனும் யுத்தம் செய்வதற்கு சமமாகக் கருதப்படுகின்ற வட்டியோடு தொடர்பு வைக்கிறான். உன்னையே நாங்கள் வணங்குகிறோம்! உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்! என்று கூறிவிட்டு அல்லாஹ்வுடன் யுத்தம் செய்கிறான்.