பக்கம் 6
ஸலப் உலமாக்கள் அகீதாவுக்கு முன்னுரிமை அளிப்பது ஏன்?
இந்த சூரத்துல் பாத்திஹா பர்ழ் தொழுகையில் மட்டும் இன்றி நபில் தொழுகைகளிலும் ஓதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சூரா எவ்வாறு அல்லாஹ்வை நமக்கு மீண்டும் மீண்டும் நினைவுப்படுக்கிறதோ, அதே அடிப்படையைக் கையாண்டு சுன்னாவின் இமாம்களும் மக்களுக்கு அல்லாஹ்வை அதிகப்படியாக நினைவுப்படுத்துவதற்காக அகீதாவின் (கொள்கையின்) கல்வியை அதிகப்படியாக எத்தி வைக்கின்றனர். அல்லாஹ்வின் நம்பிக்கை பற்றியும், அல்லாஹ்வை அவனது பெயர்,பண்புகளைக் கொண்டு தூய்மையாக விளங்குவதை பற்றியும் அவர்கள் மக்களுக்குக் கற்றுக் கொடுக்கின்றனர்.
இன்று இந்தத் தூய நம்பிக்கை மனிதனின் உள்ளத்தில் ஆழமாக பதியாததன் காரணமாகவே அம்மனிதர்கள் தங்களுடைய வாயால் அல்லாஹ் என்று ஒரு வார்த்தையில் கூறி விட்டு தனக்குத் தேவையான முறையில் செயல்படுகிறார்கள். மனிதனின் இந்நிலையின் காரணமாகவே அல்லாஹு தஆலா தினமும் தொழுகின்ற அனைத்துத் தொழுகைகளிலும் ஓதுவதற்குக் கடமையாக்கியிருக்கின்ற சூறா பாத்திஹாவில் அடிப்படை நம்பிக்கையோடு தொடர்பான விஷயங்களை அமைத்திருக்கின்றான். இதே விஷயங்களைத்தான் ஸலஃப் உலமாக்களும் தங்களின் கற்பித்தல் விஷயத்தில் கையாள்கிறார்கள்.
சுருக்கமாக, ஸலப் உலமாக்கள் அகீதா என்ற பகுதியில் பின்வரும் விடயங்களை அதிகம் எடுத்து வைப்பார்கள்.
- அல்லாஹ்வைப் பற்றி அறிந்து கொள்வதற்காக அல்லாஹ்வின் பெயர்களையும், பண்புகளையும் மனிதர்களுக்கு அடையாளம் காட்டுவது
- அல்லாஹ்வை நம்பும் விடயத்தில் தவிர்ந்து கொள்ள வேண்டிய வழிகெட்ட அடிப்படைகளைக் எடுத்துக் காட்டுவது
- மனிதர்கள் அல்லாஹ்வின் ஏகத்துவத்தின் மீது தூய்மையாக வாழ்வதற்கு வழிகாட்டுவது
- அனைத்துக் காரியங்களிலும் எவ்வாறு அல்லாஹ்வை ஏகத்துவப்படுத்தி வாழ்வது என்பதைப் பற்றி விளக்குவது
- அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையின் விஷயத்தில் மனிதன் செய்கின்ற அநியாயங்களை அடையாளம் காட்டுவது
- நம்பிக்கை விஷயத்தில் அநீதி இழைக்காமல் இருப்பதற்காக நம்பிக்கையின் சரியான வடிவத்தைப் கற்றுக் கொடுப்பது
இதனைத்தான் ஸலஃப்கள் தங்களின் அழைப்புப் பணியின் முக்கிய அடிப்படையாக அமைத்திருக்கிறார்கள். அது மட்டுமின்றி, மார்க்கத்தினுள் யூதர்கள்,கிறிஸ்தவர்கள் மூலமாகவும் மற்றும் மற்ற வழிகளில் நுழைந்துள்ள வழிகேடுகளை மக்களுக்கு அடையாளம் காட்டிக் கொடுக்கின்றனா். மேலும், நமக்கு முன்னால் அல்லாஹ்வின் அருளைப் பெற்றுக் கொண்ட சமூகமான ஸஹாபாக்களின் சமூகம் எவ்வாறு ஈமானைப் பெற்றுக் கொண்டதோ அந்த வழிமுறையை விரிவாக எடுத்துக் காட்டி மனிதர்களைத் தூய்மைப்படுத்துவதாக இந்த அகீதாவின் அழைப்புப் பணி அமைந்துள்ளது. சூறதுல் பாத்திஹா கூறுகின்ற அம்சங்களை நாம் சற்று ஆழமாகக் கவனித்தால் அதன் அடிப்படைகளை ஸலபுஸ்ஸாலிஹீன்களின் அழைப்புப் பணியில் கண்டு கொள்ள முடியும்.