Skip to content
Part 5 of 10

பக்கம் 5

ஸலப் உலமாக்கள் அகீதாவுக்கு முன்னுரிமை அளிப்பது ஏன்?

(எங்கள் இரட்சகனே !) உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்.

இந்த ஆயத்தில், தனது அடியார்கள் தனக்கு மட்டுமே வணக்கத்தைச் செய்ய வேண்டும் என்பதை நினைவூட்டும் வகையில் (எங்கள் இரட்சகனே!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம் என்ற வாசகத்தைக் கற்றுத் தருகிறான். இந்த வாசகம் தவ்ஹீதுர் உலுஹிய்யாவை எடுத்து காட்டுகின்றது. மனிதன் தனது அனைத்து வணக்கங்களை அல்லாவிற்கு மட்டுமே செய்ய வேண்டும். இதைப் பற்றிக் கூறுவதுதான் தவ்ஹீதுர் உலுஹிய்யா எனப்படுகின்றது.

நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயா.

இந்த ஆயத்தில், தனது அடியார்கள் தன்னிடம் பிரார்த்திக்க வேண்டிய ஒரு பிரார்த்தனையையும் கற்றுத் தருகிறான். நாம் உலகில் அவனிடமே உதவி தேடி, அவனை மட்டுமே வணங்கி,  அவனது அருளிலே வாழ்ந்து, மறுமையில் அவனது தீர்ப்பையும், அருளையும் எதிர்பார்த்து, அல்லாஹ்வாகிய அவன் மட்டுமே அகிலம் அனைத்துக்கும் இரட்சகன் என்பதை நம்பிக்கை கொண்டு, அந்த இரட்சகனிடமே நாம் நமக்கு நேர்வழியையும் காட்டித்தருமாறு கேட்கிறோம்.

எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அத்தகையோரின் வழியில் நடத்துவாயாக. (அது) உன் கோபத்துக்குள்ளானவர்களான (யூதர்களின்) வழியும் அல்ல. அன்றியும் வழிகேடர்களான (கிறிஸ்தவர்களின்) வழியும் அல்ல.

இந்த ஆயத்தில், நேர்வழியில் சென்றவர்களின் பாதையைப் பின்பற்றி நடப்பதற்காக “எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அத்தகையோரின் வழியில் நடத்துவாயாக“ என்ற பிரார்த்தனையின் மூலம் எமக்கு முன்னால் அல்லாஹ்வின் அருள் பெற்றவர்கள் சென்ற அப்பாதையின் பால் வழிகாட்டுகின்றான்.

அதன் பின்னால், தனது அருள் பெற்ற அடியார்கள் சென்ற பாதைக்கு முரணான பாதையில் செல்வதை எச்சரிக்கின்றான். அதாவது அல்லாஹ்வின் கோபத்திற்க்கு உள்ளானவர்களான யூதர்களின் பாதையிலிருந்தும், வழிகெட்டுப் போனவர்களான கிறிஸ்துவா்களின் பாதையிலிருந்தும் தப்பியிருப்பதற்கு தன்னிடம் உதவி தேடுமாறும் கூறி இந்த சூறாவை முடிக்கின்றான்.