Skip to content
Part 4 of 10

பக்கம் 4

ஸலப் உலமாக்கள் அகீதாவுக்கு முன்னுரிமை அளிப்பது ஏன்?

நிச்சயமாக இந்த பூமியில் அல்லாஹு ஸுப்ஹானஹுவதஆலா முஸ்லிம் என்றும், காஃபிர் என்றும் வேறுபாடு பார்க்காமல் தன்னுடைய அனைத்து அடிமைகளுக்கும் அருள் புரிகின்றான். அவ்வாறு அருள் புரியவில்லை என்றால் யார்தான் இந்த பூமியில் வாழ முடியும்?

மேலும் இந்த வாசகங்கள் இன்னுமொரு விஷயத்தையும் நமக்கு உணர்த்துகின்றது. அதாவது, அல்லாஹ்வின் அருளை இந்த உலகில் அனைவரும் அனுபவித்தாலும், அவனது அருளுக்குக் கீழாக அனைவரும் வாழ்ந்தாலும், அழிந்து விடக்கூடிய இந்த உலக வாழ்க்கையின் பின்னால் அல்லாஹ்வின் அருள் அவனது அடியார்களில் ஒரு குறிப்பிட்ட கூட்டத்திற்கு மட்டுமே நிலையாகக் கிடைக்கும் என்பதையும் அவன் நமக்கு உணர்த்துகிறான். அவர்கள்தான் இந்த உலகில் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கீழ்படிந்து நடந்த முஃமின்கள். எனவே, நாம் அந்த முஃமின்களின் தரத்தை உலகில் அடைந்து கொண்டால் தான் மறுமையில் அல்லாஹ்வின் அருளைப் பெற்றுக் கொள்வதற்கு சாத்தியம் இருக்கும். அதற்காக நாம், உலக வாழ்வில் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு அவனுக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டும்.

(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி.

இந்த ஆயத்தில், மனிதர்கள் உலகில் அநியாயங்கள் செய்து, வரம்பு மீறி நடந்து, அகங்காரத்துடன் செயல்பட்டாலும், தீர்ப்பளிக்கப்படும் ஒரு நாளில் அல்லாஹ்  ஒருவன் மட்டுமே சர்வ வல்லமை பொருந்திய அதிபதியாக இருப்பான் என்பதைத் தன் அடியார்களுக்கு நினைவூட்டுகின்றான். தீர்ப்பளிக்கப்படும் நாளில் எந்த ஒரு அநியாயகாரரும் அல்லாஹ்வின் முன்னால் தப்ப முடியாது. இதனை அந்த அடியார்கள் தங்களின் அனைத்துத் தொழுகைகளிலும் மீண்டும் மீண்டும் கூறுகின்றார்கள்.