Skip to content
Part 3 of 10

பக்கம் 3

ஸலப் உலமாக்கள் அகீதாவுக்கு முன்னுரிமை அளிப்பது ஏன்?

தினமும் மீண்டும், மீண்டும் ஓதப்படுகின்ற இந்த சூரத்துல் பாத்திஹா நமக்கு அல்லாஹ்வின் மீதான ஏகத்துவத்தை நினைவுப்படுத்துகிறது.

அனைத்துப் புகழும் அகிலத்தின் இரட்சகனான அல்லாஹ்வுக்கே உரியது.

இந்த ஆயத்தில், இரட்சகனே இல்லை என்று கூறக் கூடிய மனித சமூகத்திற்கு ஒரு பதிலாக அல்லாஹ் தன்னை அகிலத்தின் இரட்சகன் எனக் கூறுகின்றான். இந்த வாசகம் தவ்ஹீதுர் ருபூபிய்யாவை எடுத்து காட்டுகின்றது.

அல்லாஹ்வின் செயல்கள் மூலம் அவன் அனைத்தின் மீதும் ஆதிக்கம் உள்ளவனாக இருப்பதை பற்றிக் கூறுவதுதான் தவ்ஹீதுர் ருபூபிய்யா எனப்படுகின்றது. சூரத்துல் பாத்திஹாவை தினமும் ஓதுகின்ற போது இரட்சகன் ஒருவன் இருக்கிறான் என்பதையும், அகிலத்தில் உள்ள அனைத்தும் அந்த இரட்சகனின் கட்டுப்பாட்டுக்குக் கீழ்தான் இருக்கின்றது என்பதையும் அவனது அடியார்களுக்கு அவன் நினைவுப்படுத்துக்கின்றான். அவ்வாறு நினைவுப்படுத்துவதன் மூலம் அடியார்கள் தங்களின் அடிப்படையான ஈமானைக் கொண்டு தங்களின் தொழுகையை ஆரம்பிக்கின்றனர்.

உலகில் அனைவருக்கும் அருள் புரிபவன். மறுமையில் முஃமீன்களுக்கு மாத்திரம் நிலையாக அன்பு காட்டி அருள் புரிபவன்.

இந்த ஆயத்தில், தன் அருளைத் தன் அடியார்களுக்கு அவன் கூறிக் காட்டுகின்றான். அர்ரஹ்மான் என்ற வாா்த்தையின் மூலம் தான் உலகத்தில் அனைவருக்கும் அருள் புரிகின்றவன் என்பதையும், அர்ரஹீம் என்ற வாா்த்தையின் மூலம் தான் மறுமையில் முஃமின்களுக்கு மட்டும் முடிவின்றி அன்பு காட்டுபவன் என்பதையும் அவன் கூறிக் காட்டுகிறான். இதுவே ரஹ்மான் என்பதற்கும், ரஹீம் என்பதற்கும் றஸுலுல்லாஹ் ஸஹாபாக்களுக்குக் கற்றுக் கொடுத்த விளக்கமாகும். இந்த வாசகம் தவ்ஹீதுர் அஸ்மா வ ஸிபாத் எடுத்து காட்டுகின்றது.