பக்கம் 5
சனிக்கிழமையில் நோன்பு நோற்பதன் சட்டம்
இவ்விரு ஹதீஸ்களின் சட்டங்களையும் நாம் ஆராயும் போது பின்வரும் தீர்ப்புகள் அவ்விரு ஹதீஸ்களிலும் அமைந்துள்ளன.
- சனிக் கிழமையில் நோன்பின் ஒரு வகை தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது பர்ள் நோன்களை மட்டுமே அந்நாளில் நோற்க்க முடியும். பர்ள் அல்லாத ஏனைய நஃபில் நோன்புகளை அந்நாளில் நோற்கக் கூடாது. எனவே, பர்ள் அல்லாத நோன்புகள் சனிக் கிழமை நோற்பது தடுக்கப்பட்டிருப்பது போன்று, பர்ளான நோன்புகளை அந்நாளில் நோற்பது அனுமதிக்கப்பட்டதாகும். இதற்கு மாறாக எந்தவொரு நோன்பையும் சனிக் கிழமையில் நோற்க வேண்டாம் என்று அனைத்து வகையான நோன்புகளுக்கும் தடை முதலாவது ஹதீஸில் கூறப்படவில்லை.
- வெள்ளிக் கிழமை எந்தவொரு நோன்பையும் நோற்பதற்கு அனுமதி இருக்கிறது. ஆனால் அந்நாளில் மட்டும் தனியாக நோற்பது தடுக்கப்பட்டிருப்பதால் முந்திய நாளான வியாழக் கிழமையுடன் அல்லது அடுத்த நாளான சனிக் கிழமையுடன் நோற்க வேண்டும்.
- வெள்ளிக் கிழமை நோன்பை வியாழக் கிழமையுடன் சோ்த்து பிடிப்பதாக இருந்தால், அந்த இருநாளிலும் (வெள்ளிக் கிழமை,வியாழக் கிழமை) எந்த நோன்பையும் வைக்கலாம்.
- வெள்ளிக் கிழமை நோன்பை சனிக் கிழமையுடன் சோ்த்து பிடிப்பதாக இருந்தால், வெள்ளிக் கிழமையில் எந்த நோன்பையும் வைக்கலாம். ஆனால் சனிக் கிழமையில் பர்ளான நோன்பை மட்டுமே நோற்க முடியும். மாறாக, சனிக் கிழமையில் நஃபிலான நோன்பை நோற்க முடியாது.
பர்ழான நோன்புகளின் வகைகளில் சில வருமாறு,
- ரமழானின் கழாவாக விடுபட்ட நோன்பு
- நேர்ச்சையாக நோற்கப்படும் நோன்பு
- குற்றப் பரிகாரமாக நோற்கும் நோன்பு
இங்கு தெளிவாக எடுத்துக் காட்டப்பட்டது போன்று ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் இரு ஹதீஸ்களிலும் கூறப்பட்டுள்ள சட்டங்களை நாம் தெளிவாக விளங்கினால் ஹதீஸ்களில் எதனையும் தட்டுவதற்கோ, மறுப்பதற்கோ, விட்டுவிடுவதற்கோ அவசியமில்லை.
ஹதீஸ்களை ஒன்று சேர்த்து விளங்கும் போது, உஸுலுல் பிக்ஹ் எனப்படும் பிக்ஹின் தீர்ப்புக் காண்கின்ற அடிப்படையை மாத்திரம் கவனத்தில் கொள்ளாமல், ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் ஏனைய செயற்பாடுகளையும், ஸஹாபாக்களின் செயற்பாடுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதில் முக்கியமாக நாம் ஆய்வு செய்கின்ற அடிப்படை ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் ஏனைய செயல்களுக்கும், ஸஹாபாக்களின் செயல்களுக்கும் முரணாக அமைந்துவிடக் கூடாது. இவ்வாறு நமது ஆய்வின் அடிப்படை ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அனைத்து செயலோடு மோதாமல் ஒப்பாக அமைந்திருந்தால்தான் நமது முடிவை நாம் தரமாகக் கருதுவோம். இதுவே அஹ்லுல் ஹதீஸின் நிலைப்பாடாகும்.