Skip to content
Part 1 of 6

பக்கம் 1

சனிக்கிழமையில் நோன்பு நோற்பதன் சட்டம்

சனிக்கிழமையில் நோன்பு நோற்பதன் சட்டம்

ஷெய்க் யஹ்யா ஸில்மி அஸ் ஸைலானி ஹபிழஹுல்லாஹ்

بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم

الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். ஸலவாத்தும், ஸலாமும் இறுதித் தூதர் முஹம்மது முஸ்தபா (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அன்னாரின் தோழர்கள் மற்றும் குடும்பத்தினர் மீதும் உண்டாவதாக. 

மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொள்பவா்கள், அதனைக் கற்கும்  காலங்களில் அக்கல்வியைத் தரமாகப் பெற்றுக் கொண்டு, நினைவில் தரமாகப் பதிந்தால் அதனைக் கொண்டு அமைகின்ற செயலும் தரமாக அமையும்.

பின்வரும் தவறான செயற்பாடுகளினால் ஆய்வுகளும், அதனால் எடுக்கப்படுகின்ற தீர்ப்புகளும் குழப்பமானவையாக அல்லது தவறாக அமைந்து விடுகிறது.

  • கல்வியைக் கற்றுக் கொள்ளும் போது தரமாகக் கற்றுக் கொள்ளாமல் இருப்பது
  • சரியான முறையில் விளங்காமல் தனது சுய புத்தியில் விளங்குவது
  • அவசியமான அம்சங்களை விட்டுவிடுவது
  • இரண்டை ஒன்றாக்கி விடுவது
  • ஒன்றாக இருக்க வேண்டியதை பிரித்துப் பார்ப்பது  

எனவே, ஏழு வானத்தில் இருந்து இறக்கப்பட்ட கல்வியை அதன் தூய வடிவில் பெற்றுக் கொண்டு, அதனை சாியான வழிமுறையில் அதன் அர்த்தங்களைப் புரிந்து, அது பிரித்ததை பிரித்து விளங்கி, அது ஒன்று சேர்த்ததை ஒன்று சேர்த்து விளங்கி, அது விட்டுவிட்டதை விட்டு விட்டு இதனடிப்படையில் கல்வியை சுமந்தால்தான் உண்மையாக கல்வியைப் பெற்றதாக அமையும். 

எனவேதான் கல்வியை கல்வி சுமந்தவரிடமிருந்து பெற்றுக் கொள்ளும் போது தரமாகப் பெற்றுக் கொள்ள முடியும். கல்வியை அதன் சரியான வழிமுறையில் கற்காமல், கல்வியை சுமந்தவர்களை நெருங்காமல், தானாகவே நூல்களை வாசித்து, கல்வியைப் பெற்றுக் கொள்ளவதற்கு முயற்சி செய்தால் அக்கல்வியின் பல முக்கிய அவசியமான அம்சங்களைக் கவனிக்காமல் விடப்படலாம். இதனால், சாியான கல்வியின் மூலம் வரும் விளக்கத்தை விட்டு  சொந்த விளக்கங்கள் சேர்க்கப்படலாம். குறிப்பாக, யார் கல்வியைச் சுமந்தவர்களிடம் கல்வி பெறாமல் தாங்கள் விரும்பியவாறு கல்வியைத் பெற்றுக்கொள்கிறாா்களோ அவர்களுக்கு இந்நிலை ஏற்படுகிறது.

அவர்களின் இந்த வழிமுறையினால் மார்க்கக் கல்வியில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் கவனிக்கப்படுவதில்லை. இவ்வாறு வளர்ந்து வருபவர்கள் செயல்படும் போது இவர்களுடைய செயற்பாட்டிற்கும், உண்மையாகக் கல்வியை கற்றவர்களின் செயற்பாட்டிற்கும் வேறுபாடுகள் அமைந்திருக்கும். எனவேதான் இன்று இஸ்லாமிய உம்மத்தில் ஸலபுஸ்ஸாலிஹீன்களின் பாதையில் கல்வியைக் கற்று அதன்படி செயற்படுபவர்களுக்கும், அவ்வழியைத் தவிர்ந்து செயற்படுபவர்களுக்கும் வேறுபாடுகள் இருப்பதை நாம் காண்கிறோம்.