Skip to content
Part 2 of 5

பக்கம் 2

ஸஹாபா விளக்கமும், சுய விளக்கமும்

ஸலபி தஃவாவில் அல்குர்ஆனின் எந்த ஒரு வசனத்திற்கும் தனிவழியில் விளக்கம் கொடுக்கப்படுவது இல்லை. இதே போன்று, நபிமொழிகளின் விளக்கத்திலும் தனி விளக்கங்கள் கையாளப்படுவதில்லை. அல்குர்ஆனில் அல்லது நபிமொழிகளில் தனி விளக்கங்கள் கையாளப்படுகின்ற போது அது ஸலபி தஃவாவை விட்டும் வெளியேற்றப்படும். இதனால் இந்த தஃவா ஒரு தனி மனிதனின் தஃவா அல்லது ஒரு கூட்டத்தின் தஃவா என்றுதான் அழைக்கப்படும்.

வரலாற்றில் ஸலபி தஃவாவை விட்டும் வெளியேற்றப்பட்டவர்களுக்கு உலமாக்கள் பொருத்தமான பட்டத்தைக் கொடுத்தனா். இவ்வாறாக, அனைத்து வழிகேடான தஃவாவையும் ஸலபி தஃவாவை விட்டு பிரித்துக் காட்டினார்கள். இதனால் வழிகேடான தஃவா அனைத்தும் அதற்குறிய பெயர்களோடு அடையாளம் காணப்பட்டன. இதன் காரணமாகவே அனைத்துக் வழிகேடான கூட்டங்களின் தஃவத்தும் முஃதஸிலி, அஷ்அரி, ஜஹ்மி, முர்ஜிஈ, கதரி, ஜபரி போன்ற பெயர்களில் அழைக்கப்பட்டன.

இவ்வாறு அழைக்கப்படுவதற்கு ஒரு அடிப்படைக் காரணம் இருக்கிறது. அதாவது, அல்லாஹு தஆலா அவனது வேதத்தில் கூறியிருக்கும் விடயங்களும், அல்லாஹ்வின் தூதரின் நபிமொழிகள் இறக்கப்பட்ட காரணமும், அதன் வார்த்தைகளுக்குரிய விளக்கங்களும் அனைத்துக் காலங்களிலும் எவ்வித மாற்றத்துக்கும் உள்ளாகாமல் ஒரே நிலையில் இருக்க வேண்டும். அவ்வாறு மாற்றங்கள் ஏற்படாமல் இருக்க அல்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் விளக்கங்கள் ஸஹாபாக்களின் விளக்கத்தின் அடிப்படையில் மட்டுமே அனைத்துக் காலங்களிலும் விளங்கப்பட வேண்டும்.