Skip to content
Part 1 of 5

பக்கம் 1

ஸஹாபா விளக்கமும், சுய விளக்கமும்

ஸஹாபா விளக்கமும், சுய விளக்கமும்

ஷெய்க் யஹ்யா ஸில்மி அஸ் ஸைலானி ஹபிழஹுல்லாஹ்

بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم

الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد

ஸலபி தஃவாவின் அழைப்பாளா்கள், எந்த காலத்திலும் அல் குர்ஆன் மற்றும் அஸ் சுன்னாவின் விளக்கத்தைப் பேசும் பொழுது, ஸஹாபாக்கள் கூறிய விளக்கத்தைத் தவிர வேறு எந்த விளக்கத்தையும் முன்வைக்கமாட்டார்கள்.

ஸலபி தஃவாவில் முன்வைக்கப்படுகின்ற விளக்கங்களின் அஸ்திவாரம் ஸஹாபாக்களின் விளக்கமாகும்.

எந்த காலமாக இருந்தாலும், இந்த அஸ்திவாரத்தின் மீது மேற்கொள்ளப்படுகின்ற தஃவாவில், ஏழு வானத்தில் மேல் இருந்து இறக்கப்பட்ட அல்குர்ஆனும், அஸ்சுன்னாவும் எவ்வித மாற்றமும் இல்லாமல் தூய்மையான வடிவில் எத்திவைக்கப்படுகின்றது. மேலும், இத்தஃவாவில் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் மார்க்கம் எத்தகைய மதிப்போடு அமைந்திருந்ததோ அதே மதிப்போடுதான் அனைத்துக் காலங்களிலும் அமைந்திருக்கும்.

இவ்வாறு அனைத்துக் காலங்களிலும் அல்லாஹ் இறக்கிய மார்க்கத்தை இந்த பூமியில் மதிப்போடு முன்வைக்கும் தஃவாவாக ஸலபி தஃவா அமைந்திருக்கிறது.

ஸலபி தஃவா என்பது

  • அல்குர்ஆன் மற்றும் அஸ்சுன்னா பற்றிய கல்வி,
  • அக்கல்வியைக் கொண்டு அமல் செய்தல்,
  • அத்தஸ்பிய்யா - التصفية (அதாவது, சரியான கொள்கையைக் கற்றுக் கொடுத்து தவறான கொள்கையைக் கலைதல்),
  • அத்தர்பிய்யா – التربية (பயிற்றுவித்தல்) ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

சுருங்கக் கூறினால், அல்குர்ஆன் மற்றும் அஸ்சுன்னாவின் பரிபூரணமான விளக்கத்தைச் சுமந்த தஃவாவே ஸலபி தஃவாவாகும்.