Skip to content
Part 4 of 5

பக்கம் 4

உண்மையான உலமாக்களை அடையாளம் காணத் தவறிய முஸ்லிம் சமூகம்

இருந்தாலும், அவ்வழிகெட்ட தலைவர்களின் அடிவருடிகளாக இருந்தவர்கள், எந்த நூல்கள் வழிகேட்டை வளர்க்கும் என்று உலமாக்கள் எச்சரித்தார்களோ, அந்த நூல்களை எல்லாம் சிறப்பான நூல்களாக முஸ்லிம் உம்மத்திற்கு முன்னால் எடுத்துக் காட்டினர்.

இதன் விளைவாகவே இந்த உம்மத்தில் ஒவ்வொரு கூட்டத்தினரும்,

  • மௌதூதியின் விளக்கம் சிறப்பான விளக்கமென்றும்
  • செய்யித் குத்பின் பாதை சிறப்பான பாதையென்றும்
  • பி.ஜெய்னுல் ஆபிதீனுடைய கருத்து சிறந்த கருத்தென்றும்

கூற ஆரம்பித்து விட்டனர்.

இதனால், பொது மக்களிடத்தில் இவர்கள் சிறப்பைப் பெற்றுக் கொண்டனர். அவ்வாறு சிறப்பைப் பெற்றுக் கொண்ட போதும், கல்வியைச் சுமந்த உலமாக்களிடத்தில் இவர்கள் எத்தகைய மதிப்பையும் பெறவில்லை. கல்வியைச் சுமந்த உலமாக்களில் குறிப்பாக, அறபி உலமாக்களின் கைகளில் அந்நூல்கள் கிடைத்தபோது அந்நூல்களிலுள்ள நச்சுக் கருத்துகளையும், வழிகெட்ட கொள்கைகளையும் அவதானித்த உலமாக்கள், அவற்றை வாசிப்பது முஸ்லிம்களை வழிகேட்டின் பால் இட்டுச் செல்லும் எனத் தீர்ப்பளித்து விட்டனர்.

அவ்வாறிருக்க,

  • உலமாக்கள் வழிகேடு என்று சொன்னவற்றை நாம் எப்படி சிறப்பென்று சொல்வது?
  • அல்லது உலமாக்கள் வழிகேடர்கள் என்று தீர்ப்பளித்தவர்களை நாம் எப்படி சிறந்த தாஈகள் என்று சொல்வது?

இஸ்லாமிய உம்மத்தில் இவ்வாறான வழிகேடர்களும், வழிகேடுகளும் வளர்வதன் அடிப்படைக் காரணங்களில் ஒன்றுதான் முஸ்லிம் சமூகம் இனிப்பையும், கசப்பையும் பிரித்துக் காணத் தெரியாத நிலையில் இருப்பதாகும். அதனைத் தெரிந்திருந்தால், நிச்சயமாக முஸ்லிம் சமூகம் வழிகேடானதொரு விடயத்தைப் பார்த்து சிறப்பென்று ஒருபோதும் சொல்லியிருக்காது.

வழிகேட்டைப் பார்த்து சிறப்பென்று சொல்பவன் ஒரு மடையனாகத்தான் இருக்க வேண்டும். அவனிடத்தில் கல்வி இருப்பதற்கு வாய்ப்பில்லை. இவ்வாறு மடையனாக இருக்கும் ஒருவன் ஆலிம் என்ற பெயரில் நடமாடியதனால், அவனை நாம் கல்வியைச் சுமந்தவா் என்றும், பிரச்சாரம் செய்யத் தகுதியானவா் என்றும் கூற முடியுமா?

வைத்தியர்கள் விஷம் என்று கூறுவதை பொது மக்கள் மருந்து என்று சொன்னால் நாம் யாரின் கூற்றைச் சரிகாண்பது?

பொது மக்கள் கூறுவதை ஏற்றுக் கொண்டால், எமது நிலை என்னவாகும். இந்நிலைதான் இன்று இஸ்லாத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. அதாவது எந்த கொள்கைகளை உலமாக்கள் குப்ர் என்றும், ஷிர்க் என்றும், விஷம் என்றும் கூறினார்களோ, அவ்வழிகெட்ட கொள்கைகளை பொது மக்கள் சிறப்பெனக் கருதினா். இதனால் அந்த கொள்கைகளை தாங்களும் பின்பற்றி, ஏனையவர்களுக்கும் வழிகாட்ட முன்வந்து விட்டனர்.