Skip to content
Part 2 of 5

பக்கம் 2

உண்மையான உலமாக்களை அடையாளம் காணத் தவறிய முஸ்லிம் சமூகம்

உலகியல் விடயங்களுக்கு, மக்கள் அனைவரும் அதற்குரிய அந்தஸ்தை சரியாகக் கொடுத்து, அதற்கான வழிமுறையை தவறாமல் பின்பற்றுகின்றனர். ஆனால் மார்க்க விடயங்களில், இதனைக் பின்பற்றுவதற்கு விட்டு விட்டனர். இதன் காரணமாகவே அன்னாரும், இன்னாரும் உலமாக்களாக மாறிவிடுகின்றனர்.

உலகில் வாழுகின்ற உண்மையான உலமாக்களிடத்தில், இந்த அபூர்வமான உலமாக்கள் அறியப்படாதவர்களாகவே உள்ளனர். அது மட்டுமின்றி, தான்தோன்றித் தனமாக முளைக்கும் இவர்கள் உலகிலுள்ள ஏனைய உலமாக்களுடன் தொடர்புகளை வைத்துக் கொள்வதுமில்லை. அதனை அவசியமானது என கருதுவதுமில்லை.

தாங்களும் உலமாக்கள்தான் என்று கூறுபவர்கள், இஸ்லாத்தின் கல்வியை மதிக்கின்றவர்கள் என்றால் நிச்சயமாக அக்கல்வியைச் சிறப்பாகச் சுமந்த உலமாக்களுடன் தொடர்புகளை வைத்திருப்பார்கள். அதே போன்று, ஏனைய உலமாக்களிடத்தில் அறிமுகமானவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் தங்களுக்குத் தாங்களே பட்டம் வைத்துக் கொண்ட உலமாக்களை, உண்மையான உலமாக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதுதான் இன்று மார்க்கம் அடைந்திருக்கும் நிலையாகும்.

உலக விசயத்தில், யார் எதற்குத் தகுதியானவராக இருக்கிறார் என்பதை அறிந்து, தகுதியுடையவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். ஆனால், இக்கவனிப்பு மார்க்கத்திற்கு வழங்கப்படாதது ஏன்? அல்லாஹ் இறக்கி வைத்த அவனது மார்க்கத்திற்கு ஒரு மதிப்பு இருக்க வேண்டாமா? யார் வந்து எதனைச் சொன்னாலும் அது மார்க்கமாகிவிடுமா?

இவ்வாறு மார்க்கத்தினைச் சொல்ல வருபவர்கள்,

  • அல்குர்ஆனையும் சுன்னாவையும் சரியாக விளங்கியவர்கள் என்பதற்கு யார் உத்தரவாதம் அளிப்பது?
  • ஒருவர் அல்குர்ஆனை வாசித்து, அதற்கொரு விளக்கத்தைக் கொடுத்தவுடன் அவர் ஒரு முபஸ்ஸிராகி விடுவாரா?
  • அவர் கொடுக்கின்ற விளக்கங்கள் சரியானதா? அல்லது தவறானதா? என்பதை யார் முடிவு செய்வது?