பக்கம் 1
உண்மையான உலமாக்களை அடையாளம் காணத் தவறிய முஸ்லிம் சமூகம்
உண்மையான உலமாக்களை அடையாளம் காணத் தவறிய முஸ்லிம் சமூகம்
ஷெய்க் யஹ்யா ஸில்மி அஸ் ஸைலானி ஹபிழஹுல்லாஹ்
بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم
الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد
ஒரு மனிதன் இமாம் அல்லது ஆலிம் என்று சொல்லப்படுவதற்கு, அவனிடம் எவ்வாறான தகுதிகள்,அடையாளங்கள் இருக்க வேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
ஒரு சாதாரண பொது மனிதன், ஒருவரைப் பார்த்து "இவர் ஒரு ஆலிம்" என்று முடிவு எடுக்க முடியும் என்றால், அந்த மனிதா் இந்த ஆலிமை விடவும் கல்வியைப் சிறப்பான முறையில் பெற்றவராக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த ஆலிம் கற்றுக் கொண்ட நூல்கள், அவர் கையாள்கின்ற அடிப்படைகள், அவர் கொண்டுள்ள கொள்கைகள் சரியானது என்று இந்த மனிதனால் முடிவு செய்ய முடியும். இவ்வாறு என்றால் ஒருவரை ஆலிம் என்று முடிவு செய்கின்ற பொது மக்கள் அந்த ஆலிமை விடவும் சிறந்த உலமாக்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
உலகிலுள்ள அனைத்துக் கல்விகளிலும், அதற்கென்று ஒரு வழிமுறையை நாம் பின்பற்றுகிறோம். அதன் அடிப்படையில், ஒருவரை மருத்துவா் என்று ஒரு சாதாரண பொது மனிதன் முடிவு செய்வதில்லை. மாறாக மருத்துவத் துறையிலும், அதன் கல்வியிலும் தரமாக இருப்பவர்கள் தங்களுக்கு கீழ் மருத்துவக் கல்வியைப் பயின்ற ஒருவருக்கு டாக்டர் என்ற பட்டத்தைக் கொடுப்பதற்கு முன்னால், அவருடைய கல்வியையும், அதில் அவரது தரத்தையும், மருத்துவத்தில் அவருக்கு இருக்கின்ற திறமைகளையும், தகைமைகளையும் ஆராய்ந்த பின்னால், அவரை ஒரு தகுதியான மருத்துவராகக் கண்டு, அவருக்கு டாக்டர் என்ற பட்டத்தைக் கொடுக்கின்றனா். இதன் மூலமே ஏனைய மக்கள் அவரை ஒரு மருத்துவராக ஏற்றுக் கொள்கின்றனர்.
வெறுமனே ஒருவர் ஒரு நோய்க்கு மருந்தைக் கொடுப்பதனால், அவரை எவரும் மருத்துவா் என்று ஏற்றுக் கொள்வதில்லை. நாம் வாழும் சமூகத்தில், ஒரு நோய்க்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மருந்தைக் கூறுகிறார்கள் என வைத்துக் கொள்வோம். அவ்வாறு எனில், அவர்கள் அனைவரும் மருத்துவர்கள்தான் என யாரேனும் ஏற்றுக் கொள்வார்களா? நிச்சயமாக இவர்களிடம் சென்று எவரும் நம்பிக்கையுடனும், திருப்தியுடனும் மருத்துவம் செய்வதற்கு விரும்பமாட்டார்கள். உலகியல் விடயங்களில் இதனை நாம் அனைவரும் நன்கு அறிந்து வைத்துள்ளோம்.