Skip to content
Part 2 of 2

பக்கம் 2

ஸலபி சகோதரர்களுக்கு சிறப்பு மிக்க ஓர் உபதேசம்

அதாவது, அபூ மூஸா அல் அஷ்அரி (றழியல்லாஹு அன்ஹு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் சிறப்புமிக்க தோழர்களில் ஒருவராக இருந்தவா். மேலும் மார்க்கத்தைத் தெளிவாக எத்திவைக்கக் கூடியவராக இருந்தவா். இவ்வாறு தரமாகக் கல்வியைப் பெற்றவராக இருந்தும் கூட, தனக்கு முன்னால் ஒரு பித்அத்தான காரியம் நடப்பதைக் கண்ட பின்னாலும், அதனைத் திருத்துவதற்கு தானே முந்திக் கொள்ளவில்லை. அவா் தன்னை விடவும் கல்வியில் தரமானவரை நாடிச் சென்று, அவரின் மூலம் அத்தவறுகள் திருத்தப்படுவது சிறப்பானதாக அமையலாம் எனக் கருதினார். இதுவே ஸஹாபாக்களின் வழிமுறையாகும். சர்ச்சைகளுக்குத் தீர்வு காணும் போது, ஸஹாபாக்களின் இம்முன்மாதிரியை நாம் பின்பற்றி நடக்க வேண்டும். ஸஹாபாக்கள் அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றி சிறப்பாகச் செயற்பட்டதன் காரணமாகவே, அல்லாஹு தஆலா அந்த ஸஹாபாக்களின் மீது திருப்தி கொண்டதாகக் கூறுகிறான்.

ஸலபி தஃவா என்பது சத்திய மார்க்கமாகும். அது தூய்மையான வழிமுறையோடு அமைந்ததாகும்.

இதில் ஒருவர் தூய்மையாகச் செயற்படும் அளவுக்கு அதன் பயனை அடைந்து கொள்வார். எவர்களிடம் தூய்மையாகச் செயற்படும் தன்மை இல்லையோ அவர்கள், இந்த தஃவாவை விட்டும் தூரமாகிவிடுவார். அல்லாஹ்வுக்காகத் தூய்மையாகச் செயற்படும் அடியார்களுக்கு அல்லாஹ் திறமையையும், தரத்தையும் வழங்குவான். அவ்வாறு அவர்களுக்கு திறமையையும், வாய்ப்பையும், வசதியையும் அல்லாஹ் வழங்கிவிட்டால், அவர்களுக்கு இருக்கும் கடமை சத்தியத்தை அதன் தூய வடிவில் எத்திவைப்பதாகும். அதைத் தவிர வேறொரு கடமை அவர்களுக்கில்லை. இன்னும், அவர்களின் தஃவாவின் நோக்கம் கூட்டத்தைச் சேர்ப்பதையும், அந்தஸ்தை வளர்ப்பதையும் நோக்கி இருக்க முடியாது.

அல்லாஹு தஆலா அவனது தூதரை நோக்கிக் கூறுகிறான்,

فَإِن تَوَلَّوْا فَإِنَّمَا عَلَيْكَ الْبَلَاغُ الْمُبِينُ

ஆகவே, (நபியே) அவர்கள் புறக்கணித்தால் உம்மீது (கடமையு)ள்ளதெல்லாம் தெளிவாக எத்தி வைப்பதுதான்

(அந்நஹ்ல் – 16:82)

அழைப்புப் பணியில், அல்லாஹ்வின் தூதருக்கு இருக்கும் எல்லை எத்திவைப்பது மாத்திரம்தான் என்றிருக்கும் போது, அல்லாஹ்வின் தூதரை விடவும் ஏனையவர்களுக்கு மேலதிகமான எப்பொறுப்பும் இல்லை. எனவே, ஸலபி தஃவாவில் ஈடுபடுபவர்கள் எத்தி வைப்பதோடு நின்று கொள்தல் வேண்டும். அவ்வாறு எத்திவைக்கப்படும் போது, ஒவ்வொரு தனி மனிதனும் தனது நிலையை அறிந்து தன்னைத் திருத்திக் கொள்ள வெண்டும் என்பதே இங்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

எம்மில் எவரும் தான் விரும்பும் விதமாகவே ஸலபி தஃவா அமைய வேண்டுமென எதிர்பார்க்கக் கூடாது. இந்த தஃவாவில் அனைத்தும் வெளிப்படையாகவே அமைந்திருக்கும். ஒரு சமூகத்தில் ஷிர்க்கின் அடையாளங்கள் காணப்பட்டால் அதனை ஷிர்க் என வெளிப்படையாக எத்திவைப்பதே ஸலபி தஃவாவின் வழிமுறையாகும். அவ்வாறு வெளிப்படையாகச் சொல்லப்படும் போது தன்னிடம் ஷிர்க்கின் அடையாளங்கள் இருப்பதாக ஒருவர் உணர்ந்தால் அவர் தன்னில் உள்ள ஷிர்க்கை விட்டும் தன்னைத் தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும். ஆனாலும், சிலர் தங்களிடமுள்ள தவறுகளைத் திருத்திக் கொள்ள மறந்தவர்களாக இந்த தஃவாவில் தங்களுக்கு விமர்சனம் செய்யப்படுகிறது எனக் கருதி ஸலபி தஃவாவை விட்டும் தங்களை தூரமாக்கிக் கொள்கிறார்கள். இத்தகையவர்கள் தங்களைத் தாங்களே நஷ்டத்துக்கு உள்ளாக்கிக் கொள்வார்கள்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

நூல் : ஸலபி தஃவா விடயத்தில் ஓர் உபதேசம்