Skip to content
Part 1 of 2

பக்கம் 1

ஸலபி சகோதரர்களுக்கு சிறப்பு மிக்க ஓர் உபதேசம்

ஸலபி சகோதரர்களுக்கு சிறப்பு மிக்க ஓர் உபதேசம்

ஷெய்க் யஹ்யா ஸில்மி அஸ் ஸைலானி ஹபிழஹுல்லாஹ்

بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم

الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد

எம் சகோதரர்களுக்கு நாம் உபதேசிப்பது என்னவென்றால், தாங்கள் கல்வி நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுவதோடு, தஃவா களத்தில் இறங்குவதில் அவசரம் கொள்ளாமல், கல்வியைத் தரமாகப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். மேலும், கல்வியில் தரமான தகுதியை அடையும் வரை விளக்கம் கூறுவதற்கு முந்தாமல் மௌனமாக இருக்க வேண்டும். ஏனெனில், கல்வியில் தகுதியை அடைவதற்கு முன்னால் மௌனம் காப்பதே ஸலபி தஃவாவின் வெற்றியாகும். அத்தோடு, எமது சகோதரர்கள் ஸலபி தஃவாவுக்கு ஒத்துழைப்பையும், உதவியையும் தருவதே, இந்த தஃவாவின் மீது அவர்கள் கொண்டுள்ள நேசிப்புக்கான அடையாளமும் ஆதாரமுமாகும்.

மனிதர்களின் குரல்களினால் ஸலபி தஃவாவுக்கு வெற்றி கிடைக்க மாட்டாது. மாறாக, ஆதாரம் மாத்திரம் ஸலபி தஃவாவின் வெற்றிக்குப் போதுமானதாகும். அனைத்து அசத்தியங்களுடனும் மோதுவதற்கு ஆதாரங்கள் தரமாக அமைந்திருக்க வேண்டும்.

ஸலபி த.வாவை மேற்கொள்கின்ற சகோதரர்கள் சில முக்கிய விடயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  • பொது மக்களின் முன்னால் ஆதாரங்களை முன்வைக்கும் வழிமுறையை தெளிவாக அறிந்து இருக்க வேண்டும்.
  • ஆதாரங்களை மக்கள் புரிந்து கொள்ளும் விதத்திலும் ஜீரணிக்கும் வகையிலும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

இதனை கல்வியைத் தேடும் சகோதரர்களும் கவனத்தில் கொண்டு தங்களின் கல்வியைப் தெளிவான விளக்கத்துடன் பெறறுக்கொள்ள வேண்டும். இவ்வாறு பெறறுக்கொண்டால் தான், பிந்தைய காலங்களில் சமூகத்துக்கு தாங்கள் கற்றவற்றை எத்திவைக்க வருகின்ற போது, அவர்களிடமிருந்து அக்கல்வியைப் பெற்றுக் கொள்பவர்களும் தெளிவோடு பெற்றுக் கொள்வார்கள்.

ஸலபி தஃவாவை நேசிக்கின்ற பல சகோதரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்த தஃவத்தோடு தங்களை இணைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். அவர்கள் சத்தியத்தை நேசித்த நிலையில் இருந்தாலும், தங்களின் கண்களில் காண்கின்ற தவறுகளையெல்லாம் திருத்த வேண்டும் என்று எண்ணி, தங்களின் எல்லையைத் தாண்டிச் செல்வதைத் தங்களின் வழிமுறையாக அவர்கள் அமைத்துக் கொள்ளக் கூடாது. யார் அவ்வாறு அவசரம் கொள்கிறாரோ அவர் தன்னைத் தானே அழித்துக் கொள்வார்.

தீமையைத் தடுப்பதில் ஸஹாபாக்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்.

ஒரு முறை அபூ மூஸா அல் அஷ்அரி (றழியல்லாஹு அன்ஹு) கூபாவின் பள்ளிவாசலில் ஒரு காட்சியைக் கண்டார்கள். அங்கே, மக்கள் மூன்று குழுக்களாக அமர்ந்திருக்கிறார்கள். ஒரு குழுவில் ஒருவர் சுப்ஹானல்லாஹ் என்று நூறு தடவைகள் கூறுமாறு கூற, ஏனையவர்கள் அதனைக் கூறுகிறார்கள். இன்னுமொரு குழுவில் ஒருவர் அல்ஹம்துலில்லாஹ் என நூறு தடவைகள் கூறுமாறு கூற, ஏனையவர்கள் அதனைக் கூறுகிறார்கள். அதே போன்று இன்னுமொரு குழுவில் ஒருவர் அல்லாஹு அக்பர் என நூறு தடவைகள் கூறுமாறு கூற, ஏனையவர்கள் அதனைக் கூறுகிறார்கள். இதனைக் கண்ட அபூ மூஸா அல் அஷ்அரி (றழியல்லாஹு அன்ஹு) தானே முன்சென்று அந்த பித்அத்தான காரியத்தைத் தடுக்காமல், தன்னை விடவும் கல்வியில் தரமாக இருந்த அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களை நோக்கிச் சென்று, பள்ளிவாசலில் நடந்ததைக் கூறினார்கள். அதன் பின்னால், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (றழியல்லாஹு அன்ஹு) அங்கே சென்று பித்அத்தான வழிமுறையில் திக்ர் செய்து கொண்டிருந்த மனிதர்களின் செயலைக் கண்டித்து அதனைத் தடுத்தார்கள். இதில் அபூ மூஸா அல் அஷ்அரி (றழியல்லாஹு அன்ஹு) நடந்து கொண்ட விதம் எமக்கு பல படிப்பினைகளையும், ஸஹாபாக்கள் செயற்பட்ட வழிமுறையையும் எடுத்துக் காட்டுகிறது.