பக்கம் 3
உம்மத்தில் பிரியும் 72 வழிகெட்ட கூட்டங்கள் பற்றி ஓரு சுருக்கமான பார்வை
முஃதஸிலா அல்லது ஜஹ்மியா :
முஃதஸிலா அல்லது ஜஹ்மிய்யா என்ற கூட்டமே அனைத்து வழிகேடுகளுக்கும், அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுக்கிறது. இவர்களின் அடிப்படை அல்குர்ஆனுக்கும்,அஸ்ஸுன்னாவுக்கும் சிந்தனை ரீதியாக அல்லது சுய புத்தியால் விளக்கம் கொடுக்க வேண்டும் என்பதாகும். அல் குர்ஆனிலும், அஸ்ஸுன்னாவிலும் எந்த விஷயத்தை தங்களின் அறிவு ஏற்றுக் கொள்ள மறுக்கிறதோ, அவைகளை இவர்கள் மறுத்துவிடுவார்கள். இதனால் ஸஹாபாக்களின் விளக்கத்தை இவர்கள் விட்டுவிட்டார்கள்.
சில உலமாக்கள் முஃதஸிலா என்பதைக் குறிப்பிடாமல் ஜஹ்மிய்யா என்ற பிரிவினரைக் குறிப்பிட்டுள்ளனர். அடிப்படை ரீதியாகப் பார்க்கையில் ஜஹ்மிய்யாவின் அடிப்படையும், முஃதஸிலாவின் அடிப்படையும் ஒன்றே ஆகும். ஜஹ்மிய்யா எனப்படுபவர்கள் தங்களின் அறிவுக்கு முதலிடம் கொடுத்து, படைப்பினங்களுடன் அல்லாஹ்வை ஒப்பிட்டதனால் அல்லாஹ்வின் அனைத்துப் பண்புகளையும் மறுக்கின்றனர்.
இவை, வரலாற்றில் இஸ்லாமிய உம்மத் கொள்கை ரீதியாக பிரிந்த அடிப்படைகளாகும். இவை ஒவ்வொன்றும் பன்னிரெண்டு கூட்டங்களாகப் பிரிவதையும் வரலாறு மூலமாக இமாம்கள் அடையாளம் காட்டியிருக்கிறார்கள். இதுவே, இஸ்லாத்தின் கொள்கையினைப் படிக்கின்ற போது பிரிவுகளின் கொள்கைகளைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கான கல்வி ரீதியான அணுகுமுறையாகும்.
பூமியில் கோடிக்கணக்கில் கூட்டங்களும், பிரிவுகளும் காணப்பட்டாலும் அவைகள் அனைத்தும் மேற்கூறப்பட்ட 72 கூட்டத்தினுள் உள்ளடங்கியிருப்பதால், நாம் அவைகளை இலகுவாக அடையாளம் கண்டு கொள்ளலாம். மேலும், அவைகளின் அடிப்படைகள் ஆறு முக்கிய பிரிவுகளின் அடிப்படையோடு தொடர்புப்பட்டு இருப்பதையும் நாம் கண்டு கொள்ளலாம். இவை உலமாக்கள் நமக்கு வழிகாட்டிச் சென்றவைகளாகும்.
நாம் இக்கல்வியின் அடிப்படைகளைப் புரிந்து கொண்டால், இன்று நம் சமூகத்தின் மத்தியிலுள்ள வழிகேடுகளையும், வழிகேடர்களையும் கல்வி மூலமாக நாம் அடையாளம் காணலாம்.