பக்கம் 2
உம்மத்தில் பிரியும் 72 வழிகெட்ட கூட்டங்கள் பற்றி ஓரு சுருக்கமான பார்வை
ரவாபிழ் :
அரபியில் ரப்த் என்பதற்கு "மறுத்தல்" என்று பொருளாகும். இந்த கூட்டம் ஸஹாபாக்களை மறுத்ததன் காரணமாக "மறுத்தவர்கள்" (ரவாபிழ்) என அழைக்கப்பட்டார்கள். ரவாபிழ் என்ற கூட்டம் ஸஹாபாக்களின் அந்தஸ்தை மறுத்து, அவர்களை இழிவாக்கி ஸஹாபாக்களின் பலரை காபிர்கள் என்று கூறினார்கள். இஸ்லாமிய உம்மத்தில் ஸஹாபாக்களின் மீது குறை கூறும் வழிமுறையையும், சந்தேகம் கொள்ளும் வழிமுறையையும் இவர்களே ஆரம்பித்து வைத்தார்கள்.
கதரிய்யா :
கதரிய்யா என்ற கூட்டம், அல்லாஹ் விதித்துள்ள கத்ரை மறுப்பவர்கள். அல்லாஹ்வுக்கு எதிர் காலத்தைப் பற்றிய அறிவு இல்லை என்று கூறினா். அதாவது அல்லாஹ் ஒரு விஷயத்தை, அது நிகழ்ந்த பின்புதான் அறிந்து கொள்கிறான் என்றும் கூறி, அல்லாஹ்வின் பண்புகளில் தங்களின் கைவரிசையைக் காட்டினார்கள்.
ஜபரிய்யா :
ஜபரிய்யா என்ற கூட்டம், மனிதனின் அனைத்துச் செயல்களுக்கும் அல்லாஹ்வே பொறுப்பானவன் என்று கூறினா். அதாவது மனிதர்கள் செய்கின்ற பாவங்களுக்கு மனிதர்கள் பொறுப்பாளிகள் அல்ல. அல்லாஹ் கட்டாயப்படுத்தி மனிதர்களின் செயல்களைச் செய்ய வைக்கிறான் என்றும் கூறி, தங்களின் பாவங்களுக்கு அல்லாஹ்வைக் காரணம் காட்டினார்கள்.
முர்ஜிஆ :
முர்ஜிஆ என்ற கூட்டம், ஈமான் என்பது உள்ளத்தின் செயல்பாடு மட்டுமே என்று கூறினா். மேலும், ஈமான் கூடுவதுமில்லை, அது குறைவதுமில்லை என்றும் கூறினா். இதனால் மனிதன் நன்மை செய்த போதும், பாவத்தில் ஈடுபட்ட போதும் அவனுடைய ஈமானை அது எந்த வகையிலும் பாதிப்பதில்லை என்றும் கூறினர். இந்த வாதத்தின் மூலம், கலிமாவை மொழிந்தால் மட்டுமே போதுமானது என்ற அடிப்படையைத் தோற்றுவித்து, அல்லாஹ் ஏவியதை நிலைநாட்டும் தன்மையையும், அல்லாஹ் தடுத்ததைத் தவிர்ந்து கொள்ளும் தன்மையையும் இந்த உம்மத்தை விட்டும் தூரமாக்கினர். மேலும், அனைவருடைய ஈமானும் சமம்தான் என்று இவர்கள் வாதித்தார்கள்.
அஹ்லுஸ்ஸுன்னாவின் நிலைப்பாடு என்னவெனில்,
ஈமான் என்பது உள்ளத்தினால் உறுதி கொண்டு நாவினால் மொழிந்து உடலுறுப்புகளால் செயற்படுவதாகும். இன்னும் அல்லாஹ்வுக்குக் கீழ்படிவதைக் கொண்டு ஈமான் அதிகரிக்கும், அல்லாஹ்வுக்கு மாறு செய்வதைக் கொண்டு ஈமான் குறையும்
என்பதாகும்.