பக்கம் 1
உம்மத்தில் பிரியும் 72 வழிகெட்ட கூட்டங்கள் பற்றி ஓரு சுருக்கமான பார்வை
உம்மத்தில் பிரியும் 72 வழிகெட்ட கூட்டங்கள் பற்றி ஓர் சுருக்கமான பார்வை
ஷெய்க் யஹ்யா ஸில்மி அஸ் ஸைலானி ஹபிழஹுல்லாஹ்
بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم
الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினாா்கள்:
وَإِنَّ أُمَّتِيِ سَتَفْتَرِقُ عَلَى ثَلاَثٍ وَسَبْعِيْنَ مِلَّةً، كُلُّهَا فِي النَّار إِلاَّ مِلَّةٍ وَاحِدَة: قِيْلَ مَنْ هِيَ يَا رَسُولَ اللهِ قَالَ : مَا أَنَا عَلَيْهِ اليَوْمَ وَأَصْحَابِي كتاب الشريعة للآجري
எனது உம்மத் 73 கூட்டங்களாகப் பிரியும். அவை அனைத்தும் நரகம் செல்லும். ஒன்றைத் தவிர. அல்லாஹ்வின் தூதரே அவர்கள் யார்? என்று கேட்கப்பட்டபோது, அக்கேள்விக்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறிய பதில் எமக்கு நேர்வழியின் அடிப்படையை எடுத்துக் காட்டுகிறது. அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பின்வருமாறு பதில் சொன்னர்கள்,
"இன்று நானும் எனது தோழர்களும் எதன் மீதிருக்கின்றோமோ அதில் இருப்பவர்கள்."
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (அஷ் ஷரீஆ இமாம் அல் ஆஜுர்ரி)
மேற்கூறப்பட்ட நபிமொழியின் அடிப்படையில் அணுகும்போது, ஸிராதுல் முஸ்தகீம் என்ற நேரான பாதையைத் தவிர்ந்து, இன்னுமொரு பாதையினை தங்களின் பாதையாக எடுத்துக் கொண்ட பிரிவுகளை வழிகேடான பிரிவுகள் என்று நாம் பிரித்துக் காட்டுகிறோம். ஸிராதுல் முஸ்தகீம் என்பது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும், அன்னாரின் பயிற்சிப் பாசறையில் வளர்ந்த ஸஹாபாக்களும் பின்பற்றிய பாதையாகும். இதற்கு மாற்றான பாதைகளை யாரெல்லாம் உருவாக்கினார்களோ அவர்கள் அனைவரின் பாதை வழிகேடான பிரிவுகளில் உள்ளடக்கப்படுகின்றன.
மேற்கூறிய ஹதீஸில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறிய உம்மத்தின் 73 கூட்டங்களில் 72 கூட்டங்கள் நரகத்தைச் சென்றடையக் கூடிய கூட்டங்கள் ஆகும். இதனை ஆறு அடிப்படை கூட்டங்களாக அஇம்மதுல் முஸ்லிமீன் (முஸ்லிம்களின் இமாம்கள்) நமக்கு பிரித்துக் காட்டியிருக்கிறார்கள்.
இந்த ஆறு பிரிவுகளைப் பற்றி சுருக்கமான அறிமுகத்தைப் பெற்றுக் கொள்வோம்.
ஹவாரிஜ் :
அரபியில் "ஹரஜ" என்பதற்கு "வெளியேறினான்" என்று பொருளாகும். தங்களின் வழிகேட்டின் காரணமாக அல் ஜமாஅத்தை விட்டு பிரிந்து சென்றதால் இவர்களை "வெளியேறியவர்கள்" (ஹவாரிஜ்) என்று உலமாக்கள் அழைத்தார்கள். ஹவாரிஜ் என்ற கூட்டம் அல் ஜமாஅத்தை விட்டும் வெளியேறி (அதாவது ஸஹாபாக்களை விட்டும் பிரிந்து) ஸஹாபாக்களின் விளக்கத்தை மறுத்தார்கள். அத்துடன் பெரும் பாவம் செய்தவதரை காபிர் என்று தீர்ப்பளித்தார்கள். மேலும், ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடுதல் போன்ற பல வழிகேடுகள் இவர்களிடம் உள்ளன.