பக்கம் 2
இஸ்லாமிய பரிபாஷையில் பிறை என்றால் என்ன?
அந்நிய மதத்தவர் இடத்தில் பிறையைப் பற்றிக் கேட்டால், அது வானில் தோன்றும் ஒரு பொருள் என்றுதான் பதில் கூறுவார்கள். ஆனால், அந்நிய மதத்தவர்கள் தங்களின் அடிப்படையாகக் கொள்ளும் விஞ்ஞானம் கூறுவது என்னவென்றால், வானத்தில் சந்திரனின் நிலை எப்போதுமே அதன் அரைவாசி இருளாகவும், மற்றைய அரைவாசி வெளிச்சமாகவும் இருக்கும். இந்நிலை மாறுவதில்லை. நாம் பூமியிலிருந்து பார்க்கும் போதுதான், அது எமக்கு முதலாம் பிறையென்றும், இரண்டாம் பிறையென்றும் தோற்றமளிக்கிறது.
பூமியிலிருந்து பார்க்கும் போது மட்டுமே சந்திரனின் நிலைகள் இவ்வாறு தோற்றமளிக்கிறன. ஆனால் வானத்தில் அதன் நிலை ஒன்றுதான். அதாவது, அது பாதி இருளாகவும், பாதி ஒளியாகவும் இருக்கும். எனவேதான், ஏனைய வழிமுறையைக் கையாண்டு பிறையைக் காண்பதற்கும், இஸ்லாமிய வழிமுறையில் பிறை காண்பதற்கும் வேறுபாடு காணப்படுகிறது.
அந்நிய மதங்களில், அவர்கள் எந்த வழிமுறையிலேனும் பிறை என்பதற்கு விளக்கம் கொடுத்து, இதுதான் பிறையென்று சொல்ல முடியும். ஆனால் இஸ்லாத்திலே பூமியில் நின்று ஒரு முஸ்லிம் கண்ணால் காணவில்லை என்றால், அதனைப் பிறையின் இஸ்லாமிய வார்த்தைப் பிரயோகமான ஹிலால் என்று அர்த்தம் கொள்ள முடியாது.
ஷஹாதத் மொழிந்த முஸ்லிம், பூமியில் நின்று கண்களால் காணாத பிறையை இஸ்லாமிய வரைவிலக்கணத்தின் படி ஹிலால் என்று ஒருக்காலும் சொல்ல முடியாது. என்றாலும் ஏனைய மதங்களில் பிறையைக் கண்களால் காண வேண்டும் என்றோ அல்லது பூமியிலிருந்துதான் அதனைக் காண வேண்டும் என்றோ ஒரு நிபந்தனையோ, அவசியமோ இல்லை.
அவர்களைப் பொறுத்தவரை, எந்தவொரு வழிமுறையிலேனும் பிறையைக் கண்டுவிட்டார்களாயின் அதனை அவர்கள் புதிய பிறையென்று சொல்லி விடுவார்கள். எனவே பிறை என்ற பொதுவான பதத்திற்கும், ஹிலால் என்பதற்கும் வரைவிலக்கண ரீதியாக வேறுபாடுகள் இருக்கின்றன.
தமிழில் பிறையென்று சொல்லப்படுவது போல, ஆங்கிலத்தில் அதனை crescent 'க்ரஸன்ட்' என்று அழைப்பார்கள். ஆனால் crescent - க்ரஸன்ட் எனப்படுவது ஹிலாலை விடவும் அளவில் பெரியதாகும்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.
reference : இஸ்லாத்தில் பிறை காணுதலும் அந்நிய வழிமுறைகளும் (நூல்)