பக்கம் 2
ஸஹாபாக்களை பின்பற்றுவதற்கு அல்-குா்ஆன்,அஸ்-ஸுன்னாவில் இருந்து ஆதாரம்
இந்த வழிகேடுகள் எத்தனை இருந்தபோதும், வரலாறு நெடுகிலும் ஸஹாபாக்களின் பாதையில், சத்தியத்தை சுமந்த கூட்டம் சிறு கூட்டமாகவேனும் உயிரோடு நிமிர்ந்து நிற்கிறது. அவர்கள் தாங்கள் சுன்னாவிலும், ஸஹாபாக்களின் பாதையிலும் இருப்பதை அடையாளம் காட்டும் வகையில் தங்களை அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஆ என்று அழைத்துக் கொண்டார்கள்.
அதாவது,
சுன்னா என்றால், நபிகளாரின் வழிமுறை என்று பொருள். அல் ஜமாஅத் என்றால், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எந்த ஜமாஅத்தை அல்லது கூட்டத்தை உருவாக்கினார்களோ அந்த ஸஹாபாக்கள்தான் அந்த அல் ஜமாஅத். நபிவழியிலும், ஸஹாபாக்களின் பாதையிலும் செல்பவர்களே அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஆ என்ற கூட்டத்தினர்.
இந்தக் கூட்டம், வரலாற்றில் அஹ்லுல் ஹதீஸ் என்ற பெயரிலும், அஹ்லுல் ஹதீஸி வல் அஸர் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். சிலர் தங்களை ஸலபிகள் என்று அழைத்துக் கொண்டார்கள்.
ஸலபி என்ற சொற்பிரயோகம் பயன்படுத்தப்பட்ட காரணம் என்னவெனில், வரலாற்றில் அஹ்லுஸ்ஸுன்னாவின் அறிஞர்கள் ஸஹாபாக்களை ஸலப் (முன்னோர்) என்று அழைப்பது, இன்று வரை வழக்கத்தில் இருந்து வருகிறது. நிச்சயமாக ஒரு முஸ்லிமின் சிறந்த முன்னோர்கள் ஸஹாபாக்கள்தான். அந்த ஸலப்களின் பாதையில் இருப்பதை அடையாளம் காட்டவே, ஸலபி என்ற சொற்பிரயோகத்தை அறிஞர்கள் பாவிக்கிறார்கள். இருப்பினும், இன்று தமிழுலகில் ஸலபி என்ற வார்த்தை துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.
முஃதஸிலாவின் கொள்கையைச் சுமந்தவர்களும், வழிகெட்ட பாதையில் செல்பவர்களும் இன்று தங்களின் மத்ரஸாக்களில் படிப்பை முடித்துக் கொண்டவுடன், அவர்களின் பெயர்களுக்குப் பின்னால் ஸலபி என்ற வார்த்தையையும் சேர்த்துக் கொள்கிறார்கள். இவர்கள் உண்மையான ஸலபிகளல்ல. ஸஹாபாக்களின் பாதையைப் புறக்கணித்துவிட்டு, தனி வழிகளில் செல்லும் இவர்களை எவ்வாறு ஸலபிகள் என்று கூற முடியும். பொது மக்கள் இவ்வாறான புதுமையான ஸலபிகளைப் பற்றி எச்சரிக்கையோடு இருந்து கொள்ள வேண்டும்.
நிச்சயமாக, சத்தியத்தைக் கொண்டுதான் மனிதர்கள் அறியப்பட வேண்டும். மனிதர்களைக் கொண்டு சத்தியம் அடையாளம் காணப்படுவதில்லை.
அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்துக்கும், ஏனைய அனைத்து இயக்கங்களுக்கும் இடையிலுள்ள வேறுபாடு என்னவெனில் இயக்கங்கள் ஒவ்வொன்றும், அதனை ஸ்தாபித்த தலைவர் ஒருவரின் வழிகாட்டுதலின் அடிப்படையையே தங்களின் பாதையாக அமைத்துக் கொண்டுள்ளன. உதாரணமாகக் கூறுவதென்றால், இன்று தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இயங்கும் இயக்கம், முஃதஸிலா என்ற வழிகெட்ட கொள்கையையுடைய P.ஜெய்னுல் ஆபிதீன் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டதாகும்.