Skip to content
Part 3 of 4

பக்கம் 3

அல் குர்ஆனின் வரைவிலக்கணம்

வெறுமனே இவர்கள், அல்லாஹ் என்ற பெயரை மட்டுமே உச்சரிப்பார்கள். இதனால் அவர்களின் திசை மாறி அவர்கள் அல்லாஹ்வின் பெயரில் வேறு ஒன்றை வணங்கிக் கொண்டிருப்பார்கள். அதன் காரணமாக அவர்களுடைய பயமும், கீழ்படிதலும் அல்லாஹ்வின் மீது இருக்கவில்லை. அவர்களுடைய செயற்பாடுகளில் அல்லாஹ்வை அஞ்சி நடக்கும் தன்மையை அவர்களின் உள்ளம் உருவாக்கவில்லை. ஏனென்றால், அவர்கள் வணங்குவது அவர்களின் விளக்கத்தினால் உருவாக்கியதொரு கடவுளையே தவிர ரப்புல் ஆலமீனான அல்லாஹ்வையல்ல.

இந்த பித்னா இஸ்லாமிய உம்மத்தில் எப்போது தோற்றம் பெற்றதோ, அப்போதிருந்தே இஸ்லாமிய கல்வி ஒரு விளையாட்டான கல்வியாக மாறிவிட்டது. எனவேதான் அவ்வாறு விளையாடுபவா்கள் முஸ்லிமாக இருந்தும், குர்ஆனின் விடயத்தில் அல்லாஹ்வின் மீது அச்சமின்றிப் பேசுகிறாா்கள். நபிமொழிகளோடு விளையாடுகிறாா்கள். முந்திக் கொண்டு மார்க்கத் தீர்ப்புக் கொடுக்கிறாா்கள். அவனுடைய இஷ்டப் பிரகாரம் ஹராமை ஹலாலாக்குகிறாா்கள். ஹலாலை ஹராமாக்குகிறாா்கள். ஷிர்க்கை தவ்ஹீத் என்று சொல்கிறாா்கள். பித்அத்தை சுன்னா என்று சொல்கிறாா்கள். இதற்கான காரணம், மார்க்கம் சொல்லித் தந்த வரைவிலக்கணம், அவனுடைய வரைவிலக்கணமாக அமையவில்லை. 

அல்லாஹ்வின் பெயர்களையும், பண்புகளையும் அவனது சுய புத்தியினால் தட்டிவிட்ட பின்னால், அல்லாஹ்வின் சட்டங்களுக்குக் கீழ்படிவது அவனுக்குக் கடமையாகத் தோன்றாது. இந்த பித்னாவில்தான் முஃதஸிலா என்ற கூட்டம் மாட்டிக் கொண்டது. அதாவது அல்லாஹ் தன் பண்புகளாகவும், பெயர்களாகவும் கூறியவற்றை முஃதஸிலாக்கள் மறுத்தார்கள். கோபப்படுகிறான், சூழ்ச்சி செய்கிறான், பேசுகிறான், இறங்குகிறான், உயர்ந்தான் போன்ற அவனது பண்புகளை முஃதஸிலாக்கள் மறுத்து, அதற்கு காரணமும் சொல்லிக் கொண்டார்கள். முஃதஸிலா இப்பண்புகளெல்லாம், பலவீனமான படைப்பினங்களுக்கு உள்ள பண்புகள் என்று சாட்டுகளை கூறி, அல்லாஹ்வுக்கு இப்பண்புகள் இருப்பது சாத்தியம் இல்லை என மறுத்தார்கள்.

மனிதர்களைப் பொருத்த வரை, பேச்சு என்பது ஒருவன் தன் அறிவைப் பயன்படுத்தி, சிந்தித்து, நாவைப் பிரயோகித்து உச்சரிப்பதைத்தான் பேச்சு என்று நாம் சொல்கிறோம். பேச்சு என்பது அல்லாஹ்வின் பண்புகளில் ஒன்றாகும். அல் குர்ஆனிலும், ஹதீஸிலும் அல்லாஹ் பேசினான் என்று வந்துள்ளவற்றுக்கு முஃதஸிலாக்கள் ஒரு விளக்கத்தைக் கொடுத்தார்கள்.

 முஃதஸிலாக்களின் வாதம் என்னவெனில், அல்லாஹ் பேசுகிறான் என்றால்,

  • அவனுக்கு நாவிருக்கிறதா?
  • அவனும் அறிவினால் சிந்தித்து நாவைப் பிரயோகித்து உச்சரிக்கிறானா?

போன்ற கேள்விகளைப் கேட்டு, படைப்பினங்களின் இந்தப் பண்புகள் அல்லாஹ்வுக்கு இருக்க முடியாது என்று கூறி, அல்லாஹ் பேச மாட்டான் என மறுத்தார்கள். எனவே அல் குர்ஆன் அல்லாஹ்வின் பேச்சல்ல என்று கூறினார்கள். இந்த வழிகேட்டுக்கு அடிப்படைக் காரணம், அவர்கள் அல்லாஹ்வின் பண்பையும், படைப்பினங்களின் பண்பையும் சமமாகக் கருதியதுதான்.