Skip to content
Part 2 of 4

பக்கம் 2

அல் குர்ஆனின் வரைவிலக்கணம்

இதன் விளைவாக நாம் வணங்கும் அல்லாஹ்வை, இவர்கள் தங்களின் விளக்கங்களைக் கூறி, வேறொரு கடவுளாக உருவாக்கி விட்டார்கள். எந்த ரப்புல் ஆலமீனை நாம் வணங்குகின்றோமோ அந்த ரப்புல் ஆலமீனை இவர்கள் இல்லாமல் ஆக்கி விட்டார்கள். இவர்கள் தங்கள் விளக்கத்தினால் ஒன்றை உருவாக்கி, அதற்கு அல்லாஹ் என்று பெயரைக் கொடுத்து விட்டார்கள்.

இதனைத்தான் இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கஸீததுந் நூனிய்யா என்ற நூலில் பின்வருமாறு கூறினார்கள்.

 “முஷ்ரிக்குகளோ சிலைகளை வணங்கினார்கள். ஆனால் (தஃவீல்) மாற்றுக் கருத்தைக் கொடுக்கும் முஅவ்விலூன்கள் இல்லாத ஒன்றை வணங்குகிறார்கள்.”

எனவே, இவர்கள் தங்களுடைய சொந்தக் கணிப்பில், கடவுளை உருவாக்குவதற்கு முயற்சி செய்கின்றனா். இதனால், தாங்கள் உருவாக்கிய கடவுளை அல்லாஹ் என்று பெயரைச் சொன்னாலும், அது அல்லாஹ்வாக ஆகாது.

இஸ்லாத்திற்கும், குப்ருக்கும் இடையில் உள்ள ஒரு அடிப்படையான வேறுபாடு என்னவெனில், 'இஸ்லாத்தில் மாத்திரம்தான் இறைவனைப் பற்றி இறைவனே எமக்குச் சொல்லித் தருகிறான்'. அதன் மூலமே நாம் அவனைத் தெரிந்து கொள்கிறோம். ஆனால் ஏனைய மதங்களில், அவர்கள் வணங்கும் கடவுள்களைப் பற்றி, அவர்களே ஒரு விளக்கத்தைக் கொடுத்து, இதுதான் எங்கள் கடவுள் என்று கூறுகிறார்கள். இவ்வாறு, தாங்களே தங்களின் கடவுளுக்கு ஒரு விளக்கத்தை கொடுப்பவர்களுக்கு, இஸ்லாம் தரும் பதில் என்னவெனில், ஒரு மனிதன் கடவுளைப் பற்றிய ரகசியங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும் என்றால், அந்த மனிதன் கடவுளை விட சக்திய உடையவனாக இருக்க வேண்டும்.

ஒரு மனிதனால் கடவுளின் ரகசியங்களை அறிய முடியும் என்றால், அந்தக் கடவுள் கடவுளாக இருப்பதற்குத் தகுதியற்றதாகும். மற்ற மதத்தவர்கள் கூறும் இதே அடிப்படையில் நாமும், நமது புத்தியினால், இதுதான் எங்கள் இறைவனின் தன்மைகள் என்றும், ரகசியங்கள் என்றும் கூற முடியும் என்று இருந்தால், அந்த இறைவனை விடவும் நாம் அனைத்தையும் அறிந்தவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வாறு சொன்னால் அதனை விடவும் பெரும் குப்ர் இருக்க முடியாது.

அல்லாஹு (ஸுப்ஹானஹு வ தஆலா) அவனே தன்னை யாரென்று அல் குர்ஆனில் கூறியிருக்கின்றான். இன்னும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் ஸஹீஹான ஹதீஸ்களில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறி இருக்கிறாா்கள். இதனை விட்டு, யாரெல்லாம் தங்களின் தனி வழிமுறையினால் அல்லாஹ்வை உருவாக்க முயற்சி செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக அல்லாஹ்வை இல்லாமலாக்கி விட்டார்கள்.