பக்கம் 2
கல்வியைத் தேடும் மாணவர்கள் கவனிக்க வேண்டியவை
யாரெல்லாம் தகுதி வருவதற்கு முன்னால் கல்வியை எத்திவைப்பதற்கு முந்துகிறார்களோ, அவர்கள் அழைப்புப் பணியின் அஸ்திவாரத்தைத் தகர்த்து விடுவார்கள். அது மட்டும் இன்றி, பித்அத்வாதிகளின் வாதங்களுக்கு பதிலளிக்க முடியாமல் திணறுவார்கள்.
இறுதியில் சத்தியம் சமூகத்தில் தலைதூக்க முடியாத நிலையை அடைவதோடு, சத்தியத்தை அனைவரும் இழிவுபடுத்தத் தொடங்குவார்கள். இதன் விளைவாக, பொது மக்கள் சத்தியத்தை விட்டும் திரும்பி, அசத்தியத்தின் பால் செல்லத் தொடங்குவார்கள். இதன் காரணமாக, எங்கும் அசத்தியம் பரவி விடும். காலம் செல்கையில், பொது மக்களும் வழிகேடர்களின் பட்டியலில் சேர்ந்து விடுவார்கள்.
எனவே, ஸலபி சகோதரர்கள் தங்களின் கல்வி நடவடிக்கைகளில் அதிக கவனம் செழுத்த வேண்டும். நேரமும், தகுதியும் வரும் வரை தாங்கள் அழைப்புப் பணியில் ஈடுபடுவதையும், எல்லை மீறிச் செயல் படுவதையும் தவிர்ந்து கொள்வது மிகவும் அவசியமாகும். இதுவே ஸலபி சகோதரர்களின் முன்னேற்றமாகும்.
சகோதரர்கள் தங்களின் எல்லையைப் புரிந்து, அழைப்புப் பணியில் ஈடுபடுவதைத் தவிர்ந்து கொள்வது அல்லாஹ்விடத்தில் பாவமாக அமையாது. ஏனென்றால், கடமையாக இல்லாத ஒன்றை தன் மீது கடமையாக்கிக் கொள்ளாமல் இருப்பதே சரியானதாகும். அத்தோடு, அவசரம் கொண்டு அழைப்புப் பணியில் களம் இறங்காமல் இருப்பதால் சமூகத்திற்கும், மார்க்கத்திற்கும் பல நன்மைகள் இருக்கின்றன.
அதாவது, மார்க்கத்தில் சுய புத்தியோடு விளக்கம் கொடுப்பதற்கு முந்திக் கொள்ளாமல், மௌனமாக இருக்கும் ஒருவரினால், சமூகத்தில் மார்க்கம் இழிவாக்கப்படாமல் இருக்கும். மேலும் அந்த மனிதர், தேவையற்ற சந்தேகங்களை விட்டும் காப்பாற்றப்படுகிறார். மாறாக, தரமான நிலையை அடைவதற்கு முன்னால் அழைப்பு பணியில் இறங்கினால் பித்அத்வாதிகளின் சூழ்ச்சிகளையும், சர்ச்சைகளையும், மற்றும் அதில் உள்ள மயக்கத்தையும் அறியாமல் ஸலபி தஃவாவின் மீதே அவருக்கு சந்தேகம் ஏற்படத் தொடங்கிவிடும்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.