பக்கம் 1
கல்வியைத் தேடும் மாணவர்கள் கவனிக்க வேண்டியவை
கல்வியைத் தேடும் மாணவர்கள் கவனிக்க வேண்டியவை
ஷெய்க் யஹ்யா ஸில்மி அஸ் ஸைலானி ஹபிழஹுல்லாஹ்
بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم
الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد
கல்வியைத் தேடிச் செல்கின்றவர்கள், யாரிடம் இருந்து கல்வியைப் பெற்றுக் கொள்ளப் போகிறோம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்கள், சுன்னாவின் உலமாக்களை அடையாளம் கண்டு, அவர்களுடன் நெருங்கியிருப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். கல்வி கற்கும் காலங்களில், தங்களின் எல்லையைப் புரிந்து, அதனை மீறிவிடாமல் இருப்பது மிகவும் அவசியமாகும். அதாவது, பத்வாக்கள் கொடுப்பதற்கும், சர்ச்சைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், விளக்கம் கொடுப்பதற்கும் அவசரப்பட்டு அழைப்பு பணியில் களம் இறங்குதல் கூடாது.
பித்அத்வாதிகளின் அனைத்துக் கருத்துக்களுக்கும், அஹ்லுஸ்ஸுன்னா உலமாக்களின் மறுப்புகள், தீர்ப்புகள் மற்றும் விளக்கங்கள் தாராளமாக இருக்கின்றன. எனவே, உலமாக்கள் கூறிய தீர்ப்புக்களின் பாலும், விளக்கங்களின் பாலும் வழிகாட்டுவதே சரியானதாகும்.
கல்வியில் தரமான நிலையை அடைவதற்கு முன்னால், தஃவத்தில் களம் இறங்கும் மனிதர்களினால் தான் சத்தியம் பூமியில் இழிவாக்கப்படுகிறது. இன்னும், கல்வியில் உள்ள பரக்கத் அழிந்து விடுகிறது. இவ்வழிமுறைகள் அனைத்தும் தவறானவைகளாகும்.
கல்வியைத் தரமாகக் கற்று, அதனை சிறப்பாக எத்திவைப்பதற்குத் தகுதியான நிலையை அடையும் வரை பொறுமையாக இருக்க வேண்டும். தகுதியான நிலையை அடைந்த பின்னால், யாா் அக்கல்வியை எத்திவைக்க வருகிறாரோ, அவரின் மூலம் தான் சத்தியம் பூமியில் நிலைநாட்டப்படுகிறது.
மேலும், அவர் வாழும் பகுதியில், கல்வியை சரியாக சுமந்து, சிறப்பாகப் பரப்பி விடுவார். அத்தோடு, கல்வியை எத்திவைக்கும் போது வருகின்ற எதிர்ப்புகளுக்கும், கல்வியின் அடிப்படையில் தரமாக பதில் அளித்து விடுவார். இதனால் மார்க்கத்தையும், அதில் பொதிந்துள்ள சத்தியத்தையும் சமூகத்தில் மதிப்பிற்கு உரியதாக மாற்றிவிடுவார். இதன் மூலமாக, மக்கள் சத்தியத்தை உணரத் தொடங்குவார்கள். இதுவே சிறப்பான அழைப்புப் பணியாகும்.